பதிவு செய்த நாள்
13
ஜன
2025
08:01
அயோத்தி; அயோத்தியில் பாலராமர் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டதன் முதலாம் ஆண்டை முன்னிட்டு, ராமர் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. 3 நாட்களுக்கு யாகங்கள் உள்பட சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. விழாவானது யஜுர்வேத பாராயணத்துடன் தொடங்கியது. கோயில் வளாகத்தில் ஆன்மீக மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மூன்று நாட்களுக்கும் கோயில் வளாகத்தில் ராம கதை சொற்பொழிவுகள் நடைபெற்றது. அயோத்தி ராமர் கோவிலில், பாலராமர் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டதன் முதலாம் ஆண்டு விழா முன்னிட்டு பிரபுவுக்கு மகா அபிஷேகமும், அதைத் தொடர்ந்து மங்கள தரிசனமும் நடைபெற்றது.ஏராளமான பக்தர்கள் இன்று சுவாமி தரிசனம் செய்தனர். பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டதன் முதலாம் ஆண்டை முன்னிட்டு அயோத்தியில் பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
விழா குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி; அயோத்தியில் குழந்தை ராமரின் பிராணப் பிரதிஷ்டையின் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். பல நூற்றாண்டு கால தியாகம், தவம் மற்றும் போராட்டத்தின் மூலம் கட்டப்பட்ட இந்தக் கோயில், நமது கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தின் சிறந்த பாரம்பரியம் என்றும், வளர்ந்த இந்தியா என்ற தீர்மானத்தை அடைவதற்கு பிரமாண்டமான ராமர் கோயில் உத்வேகமாக மாறும் என்று நான் நம்புகிறேன்"என்று குறிப்பிட்டுள்ளார்.