பதிவு செய்த நாள்
13
ஜன
2025
08:01
உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரின் திரிவேணி சங்கமத்தில், மஹா கும்பமேளா இன்று முதல் பிப்.,26 (மஹாசிவராத்திரி) வரை நடக்கிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பதால் கும்பமேளா சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மிகப்பெரிய ஆன்மிக கலாசார விழாவான இந்த மஹா கும்பமேளா தொடர்ந்து, 45 நாட்கள் நடைபெற இருக்கிறது. உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவுக்கான சிறப்பு ஏற்பாடுகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு தீவிரமாக செய்துள்ளது. கும்பமேளா நடைபெறும் காலங்களில் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதை ஹிந்துக்கள் புனிதமாக கருதுகிறார்கள். பல்வேறு ஆன்மீக, கலாசார மற்றும் சுற்றுலா அம்சங்களுடன் ஒரு பெரிய கொண்டாட்டமாக இவ்விழா திகழ்கிறது. தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். மஹா கும்பமேளாவானது இந்தியாவின் பண்டைய கலாசார மற்றும் மத மரபுகளை உலகளாவிய முக்கியத்துவத்திற்கு உயர்த்தும், என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், இந்நிகழ்வு இந்தியாவின் வளமான ஆன்மீக மற்றும் கலாசார மரபுக்கு சான்றாக விளங்குகிறது. உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் தங்கள் பண்டைய மரபுகள் மற்றும் கலாசார வேர்களுடன் மீண்டும் இணையும் வாய்ப்பை மஹா கும்ப நிகழ்வு வழங்குகிறது; இது தெய்வீகமானதாக இருக்கும். உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருவதால் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தூய்மை, பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளுக்காக நவீன நகரத்தை ஏற்படுத்தியுள்ளோம். பக்தர்களுக்கான வசதியை மேம்படுத்துவதற்கான டிஜிட்டல் சுற்றுலா வரைபடம் பெரிதும் உதவும். கழிப்பறைகளின் தூய்மையை கண்காணிக்கவும் உதவும். அதே நேரத்தில் ஸ்மார்ட்போன்களுடன் ஒருங்கிணைந்த ஏ.ஐ., இயங்கும் பாதுகாப்பு அமைப்பும் உதவும், என்றார். துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கூறுகையில், “மஹாகும்பமேளாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கும்பமேளாவில் பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பிரயாக்ராஜ் கும்பமேளாவுக்கு வருகை தருமாறு உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் அனைவரையும் அழைக்கிறோம், என்றார்.
இந்த கும்பமேளாவில் 40 கோடி பேர் கலந்து கொள்வார்கள் என வட மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது. வட மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஷஷிகாந்த் திரிபாதி கூறுகையில், யாத்ரீகர்களுக்கு அனைத்து பாதுகாப்பு வசதிகளும் செய்யப்படும். பிளாட்பாரங்களில் குழப்பம் மற்றும் தேவையற்ற நெரிசலைத் தவிர்க்க முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்திய ரயில்வே, 10,000 வழக்கமான ரயில்கள் மற்றும் 3,000 சிறப்பு சேவைகள் என 13,000 ரயில்களை இயக்கும். நீண்ட தூரத்திற்கு சுமார் 700 மேளா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சுமார் 1,800 குறுகிய தூர ரயில்கள் 200 முதல் 300 கிமீ.,க்கு இயக்கப்படும். பிரயாக்ராஜில் நடக்க உள்ள கும்பமேளாவில் 40 கோடி பேர் கலந்து கொள்வார்கள் என்றார்.
கும்பமேளா ஏற்பாடுகள் குறித்து ஆன்மிக தலைவர் ஜகத்குரு நரேந்திராச்சாரியாஜி மஹாராஜ் கூறுகையில், “2019 மஹா கும்பமேளாவிலும் நான் பங்கேற்றேன். அதை விட இந்த கும்பமேளாவுக்கு மிகச் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல்வருக்கு எனது ஆசிர்வாதங்கள், என்றார். இவ்விழாவில் நாடு முழுவதும் இருந்து துறவிகள், ஆன்மிக தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்கின்றனர். ஆப்பிள் நிறுவன இணை நிறுவனர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லாரன் பாவெல் பிரயாக்ராஜில் மஹா கும்பமேளாவில் பங்கேற்க இந்தியா வந்துள்ளார்.
பலத்த பாதுகாப்பு: பொதுமக்கள் தங்கிட மஹா கும்பமேளா நகர் எனும் பெயரில் தனி நகரமே உருவாக்கப்பட்டிருக்கிறது. ஐம்பது லட்சம் முதல் ஒரு கோடி பேர் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் பாதுகாப்பாக 55 போலீஸ் ஸ்டேஷன்கள் ஏற்படுத்தப்பட்டு 45 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபடுகின்றனர். சங்கமம் பகுதி மற்றும் பாபமாவ் ஆகிய இரு பகுதிகளிலும் 30 மிதவை பாலங்கள், சங்கமத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு மக்கள் செல்ல ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளன. புனித நகருக்குள் வரும் பக்தர்களை வரவேற்கும் வகையில் நுழைவுவாயில்கள் நிறுவப்பட்டுள்ளன. - நமது நிருபர் -