பதிவு செய்த நாள்
13
ஜன
2025
12:01
லக்னோ: பிரயாக்ராஜ் நகரின் திரிவேணி சங்கமத்தில் இன்று மகா கும்ப மேளா தொடங்கியது. காலை 9.30 மணி வரை 60 லட்சம் பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். பிரயாக்ராஜ் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரின் திரிவேணி சங்கமத்தில், மஹா கும்பமேளா இன்று முதல் பிப்.,26 (மஹாசிவராத்திரி) வரை நடக்கிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா நடத்தப்படுகிறது. அதிலும் சிறப்பாக, 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் கிரகங்கள் நேர்கோட்டில் சேரும்போது மகா கும்பமேளா நடக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த மகா கும்பமேளா இன்று தொடங்கியுள்ளது.
மிகப்பெரிய ஆன்மிக கலாசார விழாவான இந்த மஹா கும்பமேளா தொடர்ந்து, 45 நாட்கள் நடைபெற இருக்கிறது. உலகம் முழுவதும் இருந்து பல கோடி பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவுக்கான சிறப்பு ஏற்பாடுகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு தீவிரமாக செய்துள்ளது. கும்பமேளா நடைபெறும் காலங்களில் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதை ஹிந்துக்கள் புனிதமாக கருதுகிறார்கள். பல்வேறு ஆன்மீக, கலாசார மற்றும் சுற்றுலா அம்சங்களுடன் ஒரு பெரிய கொண்டாட்டமாக இவ்விழா திகழ்கிறது. தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். திரிவேணி சங்கமத்தில், காலை 9.30 மணி வரை 60 லட்சம் பக்தர்கள் புனித நீராடி மகிழ்ந்தனர். இதனால் விழாக்கோலம் பூண்டுள்ளது. 2025ம் ஆண்டு மஹா கும்பமேளாவிற்கான பிரயாக்ராஜில் ஏற்பாடுகள் பற்றி ஒரு பிரெஞ்சு பத்திரிகையாளர் மிலானி கூறியதாவது: இந்த கும்பமேளா ஆன்மிக நிகழ்ச்சி பற்றி அதிகம் கேள்விப்பட்டேன். நான் இப்போதுதான் முதல்முறையாக வந்துள்ளேன். நிகழ்ச்சி ஏற்பாடுகள் மிகவும் நன்றாக இருக்கிறது. சாதுக்கள் மற்றும் ஆன்மீக குருக்களை சந்திப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். பிரெஞ்சு பத்திரிகையாளர் இந்த கும்பமேளாவில் பங்கேற்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.