பதிவு செய்த நாள்
15
ஜன
2025
01:01
பல்லடம்; பல்லடம் அருகே, 900 ஆண்டுக்கு முற்பட்ட பழமையான அய்யனார் சிலைக்கு பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
இது குறித்து ஆய்வு மேற்கொண்ட பல்லடம் வரலாற்று ஆர்வலர்கள் குழுவை சேர்ந்த மகிழ்வேல் பாண்டியன் கூறியதாவது: பல்லடத்தை வட்டாரப் பகுதியிகளில் தோழர்கள், பாண்டியர்கள் இருந்ததற்கான அடையாளங்கள் என்றும் பல்வேறு இடங்களில் காணப்படுகின்றன. அவ்வகையில், பல்லடத்தை அடுத்த, கள்ளிப்பாளையம் ஊராட்சி, நாதகவுண்டம்பாளையம் கிராமத்தில், பிற்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்த அய்யனார் சிற்பம் உள்ளது. இது, ஏறத்தாழ, 900 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்றைய காலத்தில், வணிகர்கள் தாங்கள் பயணிக்கின்ற இடங்களில் வழிபாடு செய்வதற்காக இது போன்ற அய்யனார் சிலைகளை உருவாக்கி வைத்து வழிபாடு செய்து வந்துள்ளனர். இங்குள்ள சிலையும் அது போன்று வணிகர்களால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம். இங்குள்ள ஏரி அருகே இருந்த இச்சிலையை மீட்டு இப்பகுதி மக்கள் கோவில் அமைத்து வழிபாடு செய்து வருகின்றனர். பழமையான இச்சிலை, இப்பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்பவருக்கு சொந்தமான தனியார் தோட்டம் ஒன்றில் பராமரிக்கப்பட்டு, இன்றுவரை பொதுமக்களால் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.
இச்சிலை உருவானதற்கான கல்வெட்டுகள் எதுவும் இங்கு இல்லை. இதன் அருகிலேயே, விக்ரம சோழ மன்னரால் புனரமைப்பு செய்யப்பட்ட சிவாலயமும் உள்ளது. மேலும், இங்கிருந்து, 10 கி.மீ., தொலைவில் இதேபோன்று இரண்டு அய்யனார் சிற்பங்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. எனில், பண்டைய காலங்களில், இந்த வழியாக வணிகப் போக்குவரத்து நடைபெற்றதற்கான அடையாளமாக இச்சிலைகள் உள்ளன. முன்னோர்களின் வழிபாட்டு முறைகளை போற்றுவதாக உள்ள இச்சிலைகளை மீட்டு பாதுகாக்க வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.