பதிவு செய்த நாள்
16
ஜன
2025
11:01
மேற்கு மாம்பலம்; மேற்கு மாம்பலத்தில், ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் டிரஸ்ட் சார்பில், 49ம் ஆண்டு மாட்டுப் பொங்கல் கோ பூஜை நேற்று விமரிசையாக நடந்தது.
ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் டிரஸ்ட் சார்பில், 49ம் ஆண்டு மாட்டுப் பொங்கல் கோ பூஜை, மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவில் தெருவில் உள்ள கோ ஸம்ரக் ஷண சாலாவில் நேற்று நடந்தது. இதில், காலை 7:00 மணிக்கு டாக்டர் வி.ராமச்சந்திரன் குழுவினரின் மங்கல இசை, 8:30 மணிக்கு மாதங்கி சங்கர் குழுவினரின் தேவாரம் மற்றும் திருப்புகழ் இன்னிசை, 10:30 மணிக்கு சிறப்பு கோ பூஜையும் நடந்தது. கோ பூஜை முடிந்ததும், பசுக்களின் மாட வீதியில் ஊர்வலம் நடந்தது. இங்கு வெள்ளிக்கிழமை தோறும் மாலை 6:00 மணிக்கு, பக்தர்களே நேரடியாக பங்கேற்கும் கோ பூஜை, தினமும் மாலை 7:00 மணிக்கு ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் நடந்து வருகிறது. ஞாயிற்றுகிழமை தோறும் காலை 8:30 மணிக்கு பஞ்சகவ்ய பிரசாதம், ஒவ்வொரு மாதமும் அனுஷம் நட்சத்திரத்தன்று காலை 11:00 மணிக்கு, ஆவஹந்தி ஹோமம் மற்றும் அன்னபிரசாதம் நடத்தப்படுகிறது.
நிகழ்வில், சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி பேசியதாவது: பசு மாடு வைகோல் மற்றும் புல்லை உட்கொண்டு, நமக்கு பால் கொடுக்கிறது. அதில் இருந்து தயிர், வெண்ணை, நெய் கிடைக்கிறது. இது எந்த முதலீட்டிலும் கிடைக்காது. அதேபோல், பசுவின் சாணியில் இருந்து, இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. அது, பூச்சி விரட்டி தான், பூச்சிக்கொல்லி இல்லை. பூச்சிகளை கொல்லும் மருந்து மனிதனையும் கொல்லும். கோ ஸம்ரக் ஷணம் என்பது மதம் சார்ந்த விஷயம் மட்டும் கிடையாது. இதனால், மனிதனுக்கு பல நன்மைகள் உள்ளன. அரை சாண் வயிற்றுக்காக சம்பாதிக்கிறோம். அதற்கு நாம் நல்ல சாப்பாடு உட்கொள்ள வேண்டும். நமக்கு தேவை இயற்கை விவசாயம். அந்த இயற்கை விவசாயத்திற்கு அடித்தளம் பசு மாடுகள். கடந்த 2014ம் ஆண்டு, 11.83 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் இயற்கை விவசாயத்தில் இருந்தது. அதுவே, 2020ம் ஆண்டு, 29.17 லட்சம் ஹெக்டேர் நிலமாக உயர்ந்துள்ளது. கிராமத்தில் வீடு இருப்பவர்கள் இயற்கை விவசாயத்தை விடாதீர்கள். விளைநிலத்தில் கட்டடங்கள் கட்ட வேண்டாம். உழவன் தான் நமக்கு முக்கியம், விவசாயத்திற்காக நம்மால் முடிந்ததை நாம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.