பதிவு செய்த நாள்
16
ஜன
2025
03:01
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் – வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கத்தில், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் மற்றும் 27 நட்சத்திரங்களுக்கு தனித்தனி சன்னதியும், அதற்கான பரிகார விருட்சம் அமைந்த கோவிலும் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் காணும் பொங்கல் தினத்தன்று, உலக நன்மை, குடும்ப ஒற்றுமை, சகல ஐஸ்வர்யமும், மஹாலட்சுமியின் பரிபூரண அருளும் கிடைக்க வேண்டி, 108 கோபூஜை விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு ஆண்டிற்கான 108 கோபூஜை விழா, இன்று விமரிசையாக நடந்தது. இதில், காலை 8:00 மணிக்கு, மூலவர் நட்சத்திர விநாயகருக்கு சிறப்பு மஹா அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மஹா தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து, கோவில் வளாகத்தில் கோபூஜை நடக்கும் இடத்தில், நட்சத்திர விருட்ச விநாயகர் மூஷிக வாகனத்திலும், சிவன், பார்வதி ரிஷப வாகனத்திலும், வள்ளி, தெய்வானையுடன் சிவசுப்ரமணியர் மயில் வாகனத்திலும், சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளினர். இதில், திரளான பக்தர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்று, கன்றுடன் கூடிய பசுவிற்கு பூஜை செய்து, தீப ஆராதனை செய்து வழிபட்டனர். தொடர்ந்து, 108 பசுவிற்கும், கோவில் நிர்வாகம் சார்பில், சிறப்பு பூஜை செய்து, வாழைப்பழம், அகத்திக்கீரை உள்ளிட்டவை வழங்கப்பட்டன.