மன்னர் குலசேகரர் அடியார்களின் கூட்டத்தோடு இருப்பதையே விரும்பினார். இதை விரும்பாத தலைமை அமைச்சர் அரண்மனையில் இருந்த ரத்தின மாலை ஒன்றை மறைத்து விட்டு அடியார்கள் மீது பழி சுமத்தினார். திருடனைக் கண்டுபிடிக்க, “அடியவர் அனைவரும் பாம்பு அடைக்கப்பட்ட குடத்தில் கை விட்டு, ‘ரத்தின மாலையை எடுக்கவில்லை’ என சத்தியம் செய்ய ஏற்பாடு செய்தார் அமைச்சர். மன்னரும் சம்மதிக்க பக்தர்கள் ஒன்று கூடினர். அடியார்கள் முன்னிலையில் மன்னர், “திருமாலின் அடியவரான இவர்கள் நேர்மை தவறாதவர்கள். இது உண்மை என்றால் பாம்பு என்னைத் தீண்டாது” எனச் சொல்லி குடத்திற்குள் தானே முதலில் கை விட்டார். பாம்பு மன்னரைத் தீண்டவில்லை. பதறிப் போன அமைச்சர், மாலையை ஒப்படைத்ததோடு மன்னிப்பும் கேட்டார். இந்த மன்னரே பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான குலசேகராழ்வார்.