பதிவு செய்த நாள்
26
ஜன
2025
12:01
தமிழக அரசின் துறைகளில் அதிகம் விமர்சிக்கப்படும், விவாதிக்கப்படும் துறை ஒன்று உண்டு என்றால் அது, இந்து சமய றநிலையத்துறையாகத்தான் இருக்கும். அரசியல், கருத்தியல் ரீதியாக இத்துறை குறித்து பலரும் அவரவர் நிலைபாட்டில் ஒரு எண்ணத்தினை கொண்டிருக்கின்றனர். அதனால்தானோ என்னவோ, இத்துறையில் செயல்படுத்தப்படும் பல நல்ல திட்டங்கள், நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் முழுமையாக மக்களைச் சென்று சேர்வதில்லை.
இந்த அரசு பொறுப்பேற்றபின், 2022ல் அறிவிக்கப்பட்ட நல்லதொரு திட்டம்தான், ஆயிரம் ஆண்டு பழமையான கோவில்களை புனரமைக்கும் திட்டம். தமிழகத்திலுள்ள எண்ணிலடங்கா பழமையான கோவில்கள் பல்லாண்டுகளாக கவனிப்பாரற்று இருந்தன. ஒவ்வொரு ஆட்சியின் போதும், பழமையான கோவில்களை சீரமைக்க, அவ்வப்போது சிறு சிறு தொகை ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒதுக்கப்படும். அந்நிதியில் சில கோவில்களில் குறிப்பிட்ட சீரமைப்பு பணிகள் மட்டும் நடந்தன. ஆனால், தற்போதைய தமிழக அரசு, கடந்த 2022 முதல், நடப்பாண்டு வரை ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வீதம், இதுவரை 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியுள்ளது. இந்த தொகை ஹிந்து சமய அறநிலையத்துறையில் இருந்து பெறப்படவில்லை. மாறாக பிரத்யேக திட்டம் தீட்டி, அரசின் நிதியில் இருந்து வழங்கப்பட்டிருக்கிறது. இதில், கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இத்திட்டத்திற்கு பொதுமக்கள் தரப்பில், நன்கொடையாக 47 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தின் பயனை உணர்ந்து, நம்பிக்கை கொண்டிருந்தால் மட்டுமே, பக்தர்கள் நன்கொடையினை தாராளமாக வழங்குவர். அவ்வாறுதான், இத்திட்டத்துக்கு நன்கொடைவழங்கியுள்ளனர்.
இந்நிதி மற்றும் கோவில் உபயதாரர் நிதி, திருக்கோவில் நிதி, பொதுநல நிதி 131 கோடியுடன் சேர்த்து, மொத்தம் 431 கோடி மதிப்பீட்டில், 274 கோவில்களில் திருப்பணி செய்ய திட்டமிட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்தின்படி கடந்த மூன்றாண்டுகளில், ஆயிரமாண்டு பழமையான 38 கோவில்களில் திருப்பணி முடிந்து கும்பாபிஷேகம் நடந்துள்ளது. ஏனைய கோவில்களில் திருப்பணிகள் தொடர்கின்றன.
தொல்லியல் நிபுணர்கள்; இத்திட்டத்தை அமல்படுத்தும்முன், தொல்லியல்துறை நிபுணர்கள் வாயிலாக, ஆயிரமாண்டு பழமையான கோவில்கள், மாவட்டம் வாரியாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, இதுவரை 714 கோவில்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த கோவில்கள் ஒவ்வொன்றும் எந்த அளவிற்கு, எத்தனை சதவீதம் சிதிலமடைந்துள்ளன என ஆய்வு செய்யப்பட்டு (10 - 80 சதவீதம்) வகைப்படுத்தப்பட்டுள்ளன.தொல்லியல் துறையின் ஆய்வு தொடர்வதால் வரும் நாட்களில் இன்னும் எண்ணற்ற பழமையான கோவில்கள் கண்டறியப்படலாம். ஆயிரமாண்டுகால பழமையான கோவில்கள் இவ்வளவு எண்ணிக்கையில் இங்கு இருப்பதே பலரும் அறிந்திராதது! இக்கோவில்களின் திட்டப்பணிகளை கவனிக்க, மாவட்ட வருவாய் அதிகாரி அந்தஸ்தில் சிறப்பு அதிகாரி ஒருவரும், தற்காலிக பணிமாற்ற அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மூன்றாண்டுகளில், 38 கோவில்கள் முழுமையாக புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்திருக்கிறது. நடப்பாண்டில் மேலும் பல கோவில்கள் கும்பாபிஷேகத்துக்கு தயாராகும். இதே வேகத்தில் பணிகள் நடந்து 714 கோவில்களும் புனரமைக்கப்பட்டால் பக்தர்கள் முழுமையாக வழிபடத் தயாராகிவிடும். இது, நம் பகுதி கோவில் கும்பாபிஷேகம் நம் காலத்தில் நடந்து...அந்தக் கண்கொள்ளாக்காட்சியை நாம் காணமாட்டோமா... என்ற ஏக்கத்திலிருக்கும் ஆயிரமாயிரம் ஹிந்து பக்தர்களுக்கு நல்ல செய்தி.
வருவாய் கூடும்; பழமையான கோவில்கள் பலவற்றில், தினமும் ஒரு கால பூஜை மட்டுமே நடக்கிறது. திருப்பணி நடந்து கும்பாபிஷேகம் நிறைவுற்றால் பக்தர்கள் வருகை அதிகரித்து, கோவிலுக்கு வருவாய் கூடும்; மூன்று கால பூஜைக்கான வருவாயையும் அந்தந்த கோவில்களே ஈட்டிக்கொள்ளும். இதற்கு முந்தைய ஆட்சிக்காலங்களிலும், அரசின் நிதியில் பழமையான குறிப்பிட்ட கோவில்கள், அவ்வப்போது பெரிய திட்டமாக அல்லாமல், சிறு சிறு நிதி ஒதுக்கி சீரமைக்கப்பட்டிருக்கலாம். அதுகுறித்த தகவல் தற்போது நம்மிடம் இல்லை. அதேவேளையில், ஆயிரமாண்டு பழமையான கோவில் என வகைப்படுத்தி, தனித்துவமான திட்டம் தீட்டி, ஆய்வைத் துவக்கி, ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் 100 கோடி ஒதுக்கி இதுவரை, 300 கோடி ரூபாயில் திருப்பணிகளை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருப்பது, இந்த ஆட்சியில் மட்டுமே. இதற்கு முழு முயற்சி எடுத்த ஹிந்து சமய அறநிலையத்துறையையும், அமைச்சர் சேகர்பாபுவையும் நாம் பாராட்டலாம். அரசியல் ரீதியான மாற்றுக்கொள்கை, சிந்தனை கொண்டிருப்போர் கூட, பழமையான கோவில்களில் நடந்து முடிந்துள்ள திருப்பணிகளை ஒரு முறை நேரில் பார்வையிட்டால், தங்களின் கருத்தை, எண்ணத்தை மாற்றிக் கொள்வர் என்பது திண்ணம்!
தஞ்சாவூர் மாவட்டம், துக்காச்சியிலுள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோவில் 1300 ஆண்டுகள் தொன்மையானது. இக்கோவிலில் கடைசியாக எப்போது கும்பாபிஷேகம் நடந்தது எனும் தகவலே இல்லாத நிலையில் ஐந்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொன்மை மாறாமல் திருப்பணிகள் முடிந்து, 2023ல், கும்பாபிஷகம் நடந்தது. தொன்மை மாறாமல் புதுப்பித்து பாதுகாத்தமைக்காக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) இக்கோவிலை, 2024ம் ஆண்டுக்கான சிறப்பு விருதுக்கு தேர்வு செய்துள்ளது பெருமிதம் கொள்ளச் செய்கிறது. இதே போன்று, இன்னும் பல கோவில்கள் விருது பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அறிகிறேன். - இல. ஆதிமூலம் -வெளியீட்டாளர், தினமலர்