வாலாஜாபாத்; வாலாஜாபாதில் பிரசித்தி பெற்ற அபிதகுஜாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது. பழுதடைந்த கோவிலை புனரமைக்க பகுதிவாசிகள் தீர்மானித்தனர். அதன்படி, கோவில் கட்டடத்தை அகற்றி, அதே வடிவிலான மண்டபம் மற்றும் இரு கோபுரத்துடன் கூடிய கோவில் கட்டுமான பணி நிறைவு பெற்றதையடுத்து, நேற்று காலை 10:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, கடந்த 29ம் தேதி அனுக்ஞை, மஹா கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. நேற்று காலை கோ பூஜை, விக்னேஷ்வர பூஜைகளை தொடர்ந்து, காலை 9:45 மணிக்கு, யாகசாலையில் இருந்து கலசம் புறப்பட்டு, 10:00 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் அறங்காவலர் டி.ராஜேந்திரன் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை செய்திருந்தார். வாலாஜாபாத் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.