பதிவு செய்த நாள்
04
பிப்
2025
05:02
மதுரை; திருப்பரங்குன்றம் மலையைக் காக்கும் அறப்போராட்டத்திற்காக மதுரை, பழங்காநத்தத்தில் முருக பக்தர்கள் குவிந்தனர்.
திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்கவும், மீட்கவும் கோரி ஹிந்து முன்னணி சார்பில் திருப்பரங்குன்றத்தில் அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு போலீசார் தடை விதித்திருந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மதியம் 12 30 மணி அளவில் கோயிலுக்குள் சுவாமி தரிசனம் செய்து சஷ்டி மண்டபம் வழியாக வெளியே வந்த 500க்கும் மேற்பட்ட திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த பா.ஜ., ஹிந்து முன்னணி, முருக பக்தர்கள் கோயில் வளாகத்தில் உள்ள வள்ளி தேவசேனா திருமண மண்டபத்தின் முன்பு அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். காப்போம் காப்போம், முருகன் மலையை காப்போம், முருகன் மலை எங்கள் மலை, எங்கள் மலையை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம், எங்கள் முருகன் மலையைக் காக்க உயிரை கொடுப்போம், உயிரை கொடுத்தேனும் முருகன் மலையை காப்போம், எங்கள் உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம். ஹிந்து விரோத தி.மு.க., அரசே தமிழகத்தை விட்டு வெளியேறு என்று அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். பத்து நிமிடத்திற்கு மேலாக அவர்கள் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அறப்போராட்டத்திற்கு நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திருப்பரங்குன்றத்திற்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஹிந்து இயக்க நிர்வாகிகள் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்பு வெற்றிவேல் வீரவேல், முருகன் மலை எங்கள் மலை என வெற்றி முழக்கமிட்டனர். மதியம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த திருப்பூர், திருச்செங்கோடு, தேனி, தூத்துக்குடி, திண்டுக்கல் , பகுதிகளை சேர்ந்த பெண்கள் கூறியதாவது: முருகனுக்கு சொந்தமான திருப்பரங்குன்றம் மலையை மீட்கத்தான் நாங்கள் திருப்பரங்குன்றம் வந்தோம். எங்களுக்கு சொந்தமான மலையில் பழனி ஆண்டவர் கோயில் அருகே மலை படிக்கட்டுகளில் மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்ட இஸ்லாமியர்களை கைது செய்ய தி.மு.க., அரசுக்கு வக்கில்லை. ஆனால் மலையை மீட்பதற்காக நாங்கள் இன்று திருநீறு பூச வந்துள்ளோம். எங்களை கைது செய்கின்றனர். ஹிந்துக்களுக்கு விரோதமான தி.மு.க ஆட்சியை அகற்ற வேண்டும். முருகனுக்கு சொந்தமான எங்கள் மலையை மீட்கும் வரை எங்களது அறப்போராட்டம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். இனி யார் தடுத்தாலும் ஹிந்துக்களின் இந்த எழுச்சியை கட்டுப்படுத்த முடியாது. ஹிந்துக்களின் உணர்வுகளை தொடர்ந்து புண்படுத்தும் முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும். தமிழக அரசின் ஏவல் துறையாக மாறிய காவல்துறையின் அராஜகங்கள் கண்டிக்கின்றோம் என்றனர்.