பதிவு செய்த நாள்
04
பிப்
2025
05:02
சென்னை; சூரியனின் வடதிசையில், தை மாதம் முதல் ஆனி மாதம் வரை பயணிக்கும் மாதங்கள், உத்திராயண புண்ணிய காலம். இந்த மாதங்களில் வரும் வளர்பிறை சப்தமி திதிகள், சூரியனுக்குரிய விரத நாட்கள். இதில், தை அமாவாசைக்கு பின் வரும் சப்தமி, ரதசப்தமி. சூரிய பகவான் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பவனி வருவதாக நம்பிக்கை. தை முதல் தேதி, அவரது தேர் வடதிசை நோக்கி திரும்பும் ரத சப்தமியன்று, அந்தப் பாதையில் தன்னை நிலைநிறுத்தி, பயணத்தை தொடரும். எனவே, இந்நாள் மிகவும் விசேஷமானது என, சாஸ்திரங்கள் கூறுகின்றன. ரத சப்தமியன்று, ஏழு எருக்கம் இலைகளை தலையில் வைத்து, கிழக்கு நோக்கி நின்று நீராடுவது வழக்கம். சூரியனின் கதிர்கள் எருக்க இலை வாயிலாக ஈர்க்கப்பட்டு, உடலில் ஊடுருவி, பல வியாதிகளை நீக்கும் என்பது முன்னோர் கருத்து. இத்தகையை சிறப்பு மிக்க ரதசப்தமி விழா, சென்னை மற்றும் புறநகரில் உள்ள பல பெருமாள் கோவில்களில், இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.
திருநீர்மலை; திருநீர்மலை ரங்கநாதப் பெருமாள் கோவிலில், ரதசப்தமியை முன்னிட்டு, நேற்று காலை 6:00 மணி முதல் சூரிய பிரபை, ஹனுமந்த வாகனம், கருடசேவை, சேஷ வாகன புறப்பாடு நடந்தது. மதியம், பெருமாளுக்கு திருமஞ்சனம், தீர்த்தவாரி நடந்தது. தொடர்ந்து, குதிரை வாகனம், சிம்மவாகனம், சந்திர பிரபை புறப்பாடு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
மயிலாப்பூர்; மயிலாப்பூர் மாதவப் பெருமாள், ஆதிகேசவப் பெருமாள் உள்ளிட்ட கோவில்களில், வாகனங்களில் புறப்பாடு நடந்தது. ஒரே நாளில், பல வாகனங்களில் வந்து அருள்பாலித்த பெருமாளை, ஏராளமான பக்தர்கள் மாடவீதிகளில் குவிந்து தரிசித்தனர். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் உள்ளிட்ட பல கோவில்களில், சூரிய, சந்திர பிரபை வாகன புறப்பாடு நடந்தது. – -நமது நிருபர் -–