பதிவு செய்த நாள்
05
பிப்
2025
05:02
தஞ்சாவூர் தஞ்சாவூர் அருகே புன்னநைல்லூர் மாயரிம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
சோழப்பேரரசர்கள் தஞ்சையை சுற்றி எட்டு திசைகளிலும் அஷ்ட சக்திகளை காவல் தெய்வங்களாக அமைத்தனர். அவ்வாறு கீழ்புறத்தில் அமைப்பெற்ற சக்தியே புன்னைநல்லூர் மாரியம்மன் ஆகும். அரண்மனை தேவஸ்தானத்துக்குட்பட்ட 88 கோவில்களுள் ஒன்று. இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். ஆவணி மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெறும். இங்குள்ள மூலவரான அம்மன் புற்றுமாரியம்மன் ஆகும். இந்த அம்மனுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தைலக்காப்பு அபிஷேகம் மட்டும் நடைபெறும்.
இக்கோவிலில் கடந்த 2004ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது 21 ஆண்டுகளுக்குப்பிறகு வரும் 10ம் தேதி (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது யாசாலை பூஜை நடைபெறுவதற்காக யாக குண்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன. விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் கடந்த 3ம்தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தினமும் பல்வேறு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மகாலட்சுமி ஹோமமும், விக்னேஸ்வர பூஜையும் நடைபெற்றது. வரும் வெள்ளிக்கிழமை மாலை முதல்காலய யாகசாலை பூஜை தொடங்குகிறது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோபுரங்களில் கலசங்கள் பொருத்தும் பணி துவங்கியது. இதில் அம்மன்கோபுரத்தில் தங்கமுலாம் பூசப்பட்ட கலசம் பொருத்தப்படுகிறது. இந்த கலசம் புதிதாக செய்யப்பட்டு பொருத்தப்படுகிறது. இதே போன்று துர்க்கை அம்மன், பேச்சியம்மன் கோபுரத்திலும் புதிதாக கலசங்கள்பொருத்தப்படுகின்றன. மற்ற கோபுரங்களில் உள்ள கலசங்கள் பாலீஷ் செய்யப்பட்டு பொருத்தப்படுகிறது. மொத்தம் 32 கலசங்கள் பொருத்தப்படுகின்றன.
இந்த தங்க முலம் பூசப்பட்ட கலசம் பொருத்துவதற்காக எடுத்துவரப்பட்டு பொருத்தப்பட்டது. அதனை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டார். மேலும், கோவில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுக்ள மற்றும் பக்தர்களுக்கு செய்யப்பட்ட அடிப்படை வசதிகளையும் பார்வையிட்டார். அப்போது கோவில் உதவி கமிஷனர் கவிதா, அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். இதேபோன்று கோவிலில் உள்ள கொடிமரத்திலும் செப்புக்கவசம் பொருத்தப்படுகின்றன. இந்த கவசம பொருத்தும் பணி தொடங்கி தற்போது முடிவடைந்து புதிய கொடிமரம் போல காட்சி அளிக்கிறது.