பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு 21 கி.மீ. கம்பளம் விரிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06பிப் 2025 04:02
கண்டவராயன்பட்டி; பழனிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களை வெப்பத்திலிருந்து பாதுகாக்க செல்லும் வழியில் 21 கி.மீ. நீளத்திற்கு கம்பளத்தை விரிக்க காவடி நண்பர்கள் குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
பழநிக்கு பாதயாத்திரை செல்லும் நகரத்தார் காவடிகளுடன் ரோடுகளில் மட்டுமின்றி பராம்பரிய பாதையில் வயல் வரப்புகள், கண்மாய்கரைகள்,ஒற்றையடிப்பாதைகளில் செல்கின்றனர். இதனால் கால்களில் காயம் ஏற்படும் வாய்ப்பு வந்து காவடி இறக்க நேரிடுவதை தவிர்க்க சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கண்டவராயன்பட்டி குமார் என்பவர் கண்டவராயன்பட்டி கண்மாய்கரையில் சுமார் 3 கி.மீ.நீளத்திற்கு சிவப்புக் கம்பளத்தை விரித்து அதில் யாத்திரை சென்றனர். இதனையடுத்து தற்போது சென்னை காவடி நண்பர்களின் களப்பணிக்குழு சார்பில் வெயில் அதிகமான மதிய நேரத்தில் நடப்பவர்கள் கால்களில் தண்ணீரை ஊற்றி காலில் கொப்பளம் ஏற்படும் என்பதால் அதைத் தவிர்க்க கம்பளம் விரிக்கத் துவங்கியுள்ளனர்.
பக்தர்கள் மதிய நேரத்தில் நடக்கும் பகுதிகளான தேவகோட்டை ரஸ்தா- ஊத்தாங்கரை வரை 3 கி.மீ. கண்டவராயன்பட்டி இரட்டைக் கண்மாய் 4 கிமீ, பாண்டாங்குடி விலக்கு முதல் கொட்டாம்பட்டி புறவழிச்சாலை வரை 2 கி.மீ. கோபால்பட்டி கருப்பர் கோயில்-உப்பாறு வரை 6 கீிமீ. திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ.இன்ஜி. கல்லூரி முதல் ரெட்டியார் சத்திரம வரை 6 கி.மீ. தூரம் சிவப்பு மற்றும் பச்சை வண்ணக்கம்பளம் விரித்துள்ளனர். குழுவின் நிர்வாகி நடசேன் கூறுகையில்‛ 23 பேர் கொண்ட குழுவினர் காவடி எடுப்பவர்களை பாதுகாப்பாக செல்ல களப்பணியாற்றுகிறோம். 21 கி.மீ.க்கு கம்பளத்தை முதல் நாளே விரிக்கிறோம். ஓய்வெடுக்கும் இடங்களில் குடிநீர் தருகிறோம். இரவில் தங்க இட வசதி இல்லாத இடங்களில் கூடாரங்கள் அமைத்துள்ளோம்’ என்றனர். 425 ஆண்டு பாரம்பரிய காவடியை பாரம்பரிய பாதையில் தொடர இவர்களின் நடவடிக்கை உதவும் என்பதில் சந்தேகமில்லை.