பதிவு செய்த நாள்
08
பிப்
2025
07:02
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேக யாகசாலை பூஜை துவங்கியது.
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், வரும், 10ம் தேதி, கும்பாபிஷேக விழா நடக்கிறது. இக்கோவிலில், 14 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம், பாலாலயம் செய்யப்பட்டது. கடந்த, 4ம் தேதி, விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. நேற்று, காலை, 9:30 மணிக்கு, அக்னி ஸங்க்ரஹணம் நடந்தது. தொடர்ந்து, நொய்யல் ஆற்றில் இருந்து புனித தீர்த்தம், கோவில் யானையான கல்யாணி மீது வைத்து எடுத்து வரப்பட்டது. அதன்பின், சிறப்பு பூஜை செய்யப்பட்ட கலசங்களில் இருந்த புனித நீர், பாலாலயம் செய்யப்பட்ட விக்கிரகங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அதன்பின், பரிவார மூர்த்திகள் கலசங்கள் யாகசாலைக்கு எடுத்து வரப்பட்டது. மாலை, 5:00 மணிக்கு, மங்கல இசை, விநாயகர் பூஜை, முளைப்பாலிகை இடுதல், பிரதான தெய்வங்களான பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மன், பால தண்டபாணி கலாகரிஷனம் நடந்தது. மாலை, 7:00 மணிக்கு, யாகசாலையில், 96 வகையான மூலிகை திரவியங்கள் தெளிக்கப்பட்டு. முதற்கால யாகசாலை பூஜை துவங்கியது. இதில், பல தளங்களில் இருந்து வரும் ஓதுவாமூர்த்திகள், பண்ணிரு திருமுறை விண்ணப்பம் செய்தனர். இரவு, 9:00 மணிக்கு, பூர்ணாகுதி, தீபாராதனையுடன் முதல் கால வேள்வி பூஜை முடிவடைந்து. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வரும், 10ம் தேதி, காலை, 9:50 மணி முதல் 10:05 மணி வரை, மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.