உத்தரகோசமங்கை கோயில் பிரம்ம தீர்த்தத்தில் சாக்கடை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05டிச 2012 11:12
கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் எதிரில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் சாக்கடை நீர் கலப்பதால், பக்தர்கள் நீராட முடியாமல் தவிக்கின்றனர். இக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பிரம்மாவிற்கு சாப விமோசனம் கிடைத்ததால் பிரம்ம தீர்த்தத்தில் நீராடிய பின், சுவாமி தரிசனம் மேற்கொள்ள வேண்டும் என்பது ஐதீகம். பல சிறப்புகளை பெற்ற இந்த குளம் பராமரிப்பின்றி பிளாஸ்டிக், பாலிதீன் கழிவுகள் சங்கமித்துள்ளது. குளத்தை சுற்றியுள்ள வீடுகளில் இருந்து கழிவுநீர் பிரம்மதீர்த்தத்திற்கும் கலக்கிறது. துர்நாற்றம் வீசுவதால், நீராட முடியாமல் பக்தர்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். நான்கு படித் துறைகளுடன் இருந்த இந்த தீர்த்தகுளம், ஆக்கிரமிப்பால் ஒரு படித் துறையாக மாறி விட்டது. பண்டிகை காலங்களில் ஆடு வெட்டும் களமாகவும், விற்பனை நிலையமாகவும் படித்துறை மாறி உள்ளது. கோயில் நிர்வாக அலுவலர் சாமிநாதன் கூறுகையில், ""விரைவில் பிரம்ம தீர்த்தம் தூர்வாரப்படும். கழிவுநீர் குளத்திற்குள் செல்வதையும், படித்துறையில் ஆடுகள் வெட்டுவதும் தடுக்கப்படும், என்றார்.