மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திரு விழா நாளை (பிப்.,11) நடக்க உள்ளதை முன்னிட்டு, அதிகாலை முதல் இரவு வரை கோயில் நடை சாத்தப்படுகிறது.
இக்கோயில் தை தெப்பத்திருவிழா ஜன.,31ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, இரவு சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருள்கின்றனர். பிப்.,5ல் திருஞானசம்பந்தர் சைவ சமய வரலாற்று லீலை, பிப்.,7 வலைவீசி அருளிய லீலை, பிப்.,8ல் இரவு சப்தாவரணம், நேற்று(பிப்.,9)தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று சிந்தாமணியில் கதிரறுப்பு திருவிழாவை தொடர்ந்து, நாளை (பிப்.11) தெப்பத்திருவிழா நடக்கிறது. நாளைஅதிகாலை அம்மன், சுவாமி கோயிலில் இருந்து புறப்பட்டு தெப்பக்குளம் வருவர். அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் காலை 8:35 மணி முதல் 8:59 மணிக்குள் எழுந்தருளி தெப்பத்திருவிழா நடைபெறும். காலை இரு முறையும், இரவு ஒரு முறையும் தெப்பத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். இரவு 7:00 மணிக்கு மேல் சுவாமி தங்கக்குதிரை வாகனத்திலும், அம்மன் அவுதா தொட்டிலிலும் எழுந்தருளி மீண்டும் கோயிலுக்கு புறப்படுவர். சுவாமி தெப்பத்திற்கு சென்று மீண்டும் கோயிலுக்கு திரும்பும் வரை நாளை மீனாட்சி அம்மன் கோயில் நடை சாத்தப்பட்டு இருக்கும்.