பதிவு செய்த நாள்
10
பிப்
2025
03:02
குன்னூர்; வெலிங்டன், பாலசுப்ரமணிய சுவாமி கோவில், கோதண்டராமர் கோவில்களில் மகா கும்பாபிஷேக விழா நடந்தன.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன், பேரக்ஸ் கன்டோன்மென்ட், 1853ல் உருவான போது, பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலும், முதற்படியாக மூலஸ்தானம் மற்றும் அர்த்த மண்டபத்துடன் கட்டப்பட்டது. 1903ல் மணிமண்டபம், விநாயகர் மற்றும் சிவபெருமான் சன்னதிகளும், 1933ல் மகா மண்டபமும் கட்டப்பட்டன. 1978 ல் மூலவரின் திருவுருவம், பாலசுப்ரமணிய சுவாமியின் மூலவர் ஸபாலதண்டாயுதபாணியாக மாற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து,1995, 2009 ஆண்டுகளில் மஹா கும்பாபிஷேகம் நடந்தன. தற்போது, கோவிலின் முன்புறம், விநாயகர், பைரவருக்கு புதிய மண்டபம், மகா மண்டபத்தின் உட்புறம் புதிய கொடிமரம், அன்னதானக்கூடம் திருப்பணிகள் நடந்தன.
நீலகிரியின் முதல் முருகர் கோவில் என அழைக்கப்படும் வெலிங்டன், பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், இன்று காலை 9:45 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக, விநாயகர் வழிபாடு, துவார பூஜை, கிப்சூரிய பூஜை, தத்துவர்த்தனை, மூல மந்திர ஹோமம், நாடி சந்தானம், திரவிய சமர்ப்பணம், பூர்ணாகுதி ஆகியவை நடந்தன. தொடர்ந்து அருகில் உள்ள கோதண்ட ராமர் கோவிலில் காலை 10:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரங்களில் கோதண்டராமர். சீதா, லட்சுமணன், அனுமன் அருள்பாலித்தனர். இந்த இரு விழாக்களிலும், வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரிய முதன்மை நிர்வாக அலுவலர் வினித் பாபா சாஹிப் லோட்டே, நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா, கூடுதல் கலெக்டர் சங்கீதா, வாரிய பொறியாளர் சுரேஷ், வாரிய முன்னாள் துணை தலைவர் வினோத் குமார் உட்பட பலர் பங்கேற்றனர். விழாவையொட்டி, பக்தர்களுக்கு கேரள பாரம்பரிய அறுசுவை உணவு வழங்கப்பட்டது. பாலசுப்ரமணியர் சுவாமி கோவிலில் ஊட்டி எல்க்ஹில் முருகர் கோவில் அர்ச்சகர் திருஞானசம்பந்த சிவம், கோதண்ட ராமர் கோவில் திருப்பதி திருமலா தேவஸ்தான பாஞ் ராத்ர ஆகம வித்வான் நரசிம்மதி பட்டர், ஆகியோர், விழா சர்வ சாதகங்களை மேற்கொண்டனர். ஏற்பாடுகளை இந்து அறநிலைய துறையினர், திருப்பணிக்குழுவினர், விழா குழுவினர், திருப்பணி உபயதாரர்கள், ஊர் மக்கள் செய்தனர்.