பதிவு செய்த நாள்
10
பிப்
2025
04:02
பழநி; பழநி தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதை தொடர்ந்து மூவாயிரம் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். பழநி முருகன் கோயிலில் கூட்ட நெரிசல் அதிக அளவில் இருந்தது. வெளிப்பிரகாரம் முழுவதும் பக்தர்கள் நிரம்பி இருந்தனர். 5 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். பிரகாரத்தில் கைலாசநாதர் சன்னதி, ப்ரகன்நாயகி, பிரகதீஸ்வரர் சன்னதிகள் பக்தர்களின் தரிசனத்திற்கான திறந்து தரப்பட்டதால் பக்தர்கள் சன்னதிகளை தரிசனம் செய்தனர். குடமுழுக்கு மண்டபம் வழியாக பக்தர்கள் மலைக்கு மேலே ஏற அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் அதிகம் இருந்த காரணத்தால் குழுவாக நிறுத்தி வைத்து யானை பாதையில் அனுப்பி வைத்தனர். படிப்பாதை வழியாக கீழ இறங்கி செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் கிரிவிதியில் வலம் வரும் போது கோலாகலமாக காவடி ஆட்டம் ஆடி,மேள தாளங்களுடன் வந்தனர்.
பழநி, கோயில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் வருகை ஏராளமாக அதிகரித்து வருகிறது இந்நிலையில் பிப்.,11, ல் தைப்பூச தேரோட்டம் ரத வீதிகளில் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி மாவட்ட மூன்று எஸ்.பி தலைமையில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் குற்ற செயல்களை கண்காணித்து வருகின்றனர். சிசிடிவி மூலம் கண்காணிப்பு செய்து வருகின்றனர். கோவை, திண்டுக்கல், நாமக்கல் பகுதியில் இருந்து தீயணைப்பு துறை வாகனங்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். மேலும் 10 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளது. இடும்பன் குளம், சண்முக நதி ஆகியவற்றில் ரப்பர் படத்தின் மூலம் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
தற்காலிக பார்க்கிங் வசதிகள் 12 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தற்காலிக கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் சார்பில் அடிவாரம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து குடமுழுக்கு மண்டபம் வரை குடிநீர் வசதி புதிதாக அமைக்கப்பட்டு கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து நேற்று துவங்கி வைத்தார். கோயில் சார்பில் பக்தர்கள் கீழே இறங்கி வரும் வழியில் தொன்னையில் பிரசாதம் வழங்கப்படுகிறது. மேலும் பக்தர்கள் பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கி வருகின்றனர். அன்னதான வழங்கும் இடத்தை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பக்தர்களின் வருகை அதிகம் உள்ள நிலையில் போக்குவரத்து நெரிசல் நகரில் அதிகரித்து இருந்தது. இதனால் பயணிகள் அதிக அளவில் சிரமடைந்தனர். இடும்பன் கோயில் அருகே உள்ள விடுதிக்கு வாகனங்களை அனுமதிக்க மறுத்ததால் வாகனங்களில் வந்தவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர். இடும்பன் இட்டேரி ரோடு, பூங்கா ரோடு, அருள்ஜோதி வீதி பாலசமுத்திரம்ரோடு ஆகியவற்றில் ஆக்கிரமிப்பு அதிகரித்து இருந்தது. சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி இருந்ததால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. காலையில் அரசு பேருந்துகளை குளத்தூர் ரோடு பகுதியில் நிறுத்தியதால் பக்தர்கள் வாகனங்கள் வந்து சேர்ந்த சிரமடைந்தனர். சிறிது நேரத்தில் அதை சரி செய்யப்பட்டது. மாலையில் பாதயாத்திரை பக்தர்கள் பஸ்களில் செல்ல பஸ் ஸ்டாண்டில் குவிந்தனர்.
சிறப்பு ரயில்; பழநி, தண்டாயுதபாணி கோவிலில் நாளை பிப்., 11 தைப்பூச திருவிழாவையொட்டி பயணிகளின் வசதிக்காக மதுரை - பழநி இடையே பிப். 11 12 இரண்டு நாட்கள் சிறப்பு ரயில் இயக்கம். மதுரையிலிருந்து காலை 8.45 மணிக்கு புறப்பட்டு 11.30 மணிக்கு பழநி சென்று சேரும். மறு மார்க்கத்தில் மாலை 3 மணிக்கு புறப்பட்டு இரவு 5.45 மணிக்கு மதுரை வந்து சேரும். சிறப்பு ரயில்கள் சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.