பதிவு செய்த நாள்
10
பிப்
2025
04:02
சென்னை; வில்லிவாக்கத்தில் அமைந்துள்ளது தேவி பாலியம்மன் கோவில். நுாற்றாண்டு பழமை வாய்ந்த இக்கோவிலுக்கு பாலாலயம் செய்து, திருப்பணிகள் நடந்தது. இதைத் தொடந்து, இன்று கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு, யாகசாலை வளர்க்கப்பட்டு, ஹோமங்கள், கால பூஜைகள் நடந்தன. கும்பாபிஷேக நாளான இன்று யாகசாலை பூஜை முடிந்து, வஸ்திர தானம், கடப்புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, கும்ப நீர் கோபுர கலசங்களில் சேர்த்து, மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: வில்லிவாக்கம், தேவி பாலியம்மன் கோவில் உபயதாரர் நிதி, 2.60 கோடி மதிப்பில், திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இரண்டு நாட்களில், 76 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்துள்ளது. மதுரை, தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள் பணி வரன்முறை செய்யப்படவில்லை. அங்கு பக்தர்களுக்கும், அர்ச்சகர்களுக்கும் இடையே சிறு பிரச்சனைகள் ஏற்பட்டது. அப்போதைய கமிஷனர் குமரகுருபரனால், அர்ச்சகர்கள் பணி வரன்முறை செய்யப்பட்டனர். இதையடுத்து, அர்ச்சகர்களாக ஒன்றுகூடி, பக்தர்களிடம் இருந்து வரும் காணிக்கையை உண்டியலில் செலுத்துவது என முடிவெடுத்து, செயல்படுத்தி வந்தனர். அதில், ஏற்பட்ட சிறு பிரச்னையால், கோவில் செயல் அலுவலர், தக்காரின் அனுமதி பெறாமல் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அது தேவையற்றது. கமிஷனர் உத்தரவுப்படி சுற்றிக்கை திரும்ப பெறப்பட்டது. செயல் அலுவலர் மீது விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். கும்பாபிஷேகத்தில், அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர், வில்லிவாக்கம் எம்.எல்.ஏ., வெற்றி அழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.