பதிவு செய்த நாள்
11
பிப்
2025
05:02
மதுரை; தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகம் எங்கும் முருகன் கோவில்களில் சாரை சாரையாக பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளக்ககிறது.
பல ஆன்மிக அற்புதங்கள் நிறைந்த புண்ணிய தினம் இது. தைப்பூசம் சிவசக்தி, முருகனுக்குரிய சிறப்பான நாள். பழநி முதலாக முருகன் திருத்தலங்கள் தைப்பூசம் வெகுவிசேஷம். தைப்பூசத்தன்று நீராடி குருவை வழிபட கல்வி ஞானம் பெருகும். இன்று முருகனை வழிபட சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். முருகனின் ஆறு படைவீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்துார், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலையில் அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்தனர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் பால் குடம் எடுத்தும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். அதிகாலை முதல் குவிந்த பக்தர்கள் மலையை சிவனாக சுற்றி வந்து பரவசத்துடன் தரிசனம் செய்து வருகின்றனர்.
தமிழ்கடவுளாம் முருகப்பெருமானின் ஆறுபடைவீடுகளில் இரண்டாவது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அனைத்து ரோடுகளிலும் பச்சை ஆடை உடுத்திய முருகனின் பக்தர்களாகவே காட்சியளிக்கின்றனர். அந்தளவுக்கு திருச்செந்தூர் தைப்பூச திருவிழாவில் கலந்துகொள்ள தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் விரதமிருந்து பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.
பழநி இடும்பன் குளம், சண்முக நதி பகுதிகளின் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது. தைப்பூச திருவிழா விழாவை முன்னிட்டு பக்தர்கள் குவிந்தனர். நேற்று இரவு முதல் பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் காவடிகளுடன் கோயிலில் குவிந்தனர். காத்திருந்து தரிசனம் செய்தனர்.
அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் தைப்பூச விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு காலை முதலே, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால், பொதுவழியில், நீண்ட வரிசையில், மூன்று மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். பக்தர்கள் காவடிகளுடன் வந்தும், மொட்டை அடித்தும் முருகப் பெருமானை வழிப்பட்டனர்.
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச தேர் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மருதமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
வடபழநி முருகன் கோவிலில், ஆண்டு தோறும் தைப்பூசம் விழா சிறப்பாக நடைபெறும். இன்று தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டது முதல் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். எங்கு பார்த்தாலும் முருக பக்தர்களில் அரோகரா கோஷமாகவே உள்ளது.
சென்னிமலையில் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தனர். இதேபோல் அனைத்து முருகன் கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. முருக பக்தர்களால் தமிழகமே ஆன்மிக பூமியாக காட்சியளிக்கிறது.