பதிவு செய்த நாள்
12
பிப்
2025
11:02
பாகூர்; பிள்ளையார்குப்பம் சிவசுப்ரமணியர் சுவாமி கோவிலில் அமைக்கப்பட்டுள்ள 21 அடி உயர முருகர் சிலைக்கு தமிழ் முறைப்படி குடமுழக்கு விழா நடந்தது. கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பத்தில், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் முன், புதிதாக 21 அடி உயர முருகர் சிலை அமைக்கப்பட்டது. இதன் குடமுழக்கு விழா நேற்று நடந்தது. இதையொட்டி, 9ம் தேதி காலை 9:30 மணிக்கு மூத்த பிள்ளையார் வேள்வி, நவக்கோள் நல விண்ணப்ப வழிபாடும் நடந்தது. 10ம் தேதி காலை 9:30 மணிக்கு புனித நீர் வழிபாடு, புதிய சிலைக்கு அருட்கண் திறத்தல், சக்கரம் பதித்தல், காப்பு அணிவித்தல், இரவு 7:30 மணிக்கு முத்தமிழால் முதல் கால வேள்வி நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை 7:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி விண்ணப்பம், தீந்தமிழில் இரண்டாம் கால வேள்வி நடந்தது. 9.00 மணிக்கு, முருகர் சிலைக்கு, புனித நீர் ஊற்றி திருக்குட முழக்கு செய்யப்பட்டது. துணை சபாநாயகர் ராஜவேலு, லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி உட்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.