பதிவு செய்த நாள்
12
பிப்
2025
03:02
துலாம்: சித்திரை 3, 4ம் பாதம் ;எந்த ஒன்றிலும் கவனமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் நன்மையான மாதம். உங்கள் நட்சத்திரநாதன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செயல்களில் முழுமையான கவனம் தேவை. ஒவ்வொரு வேலையிலும் பின் விளைவுகள் பற்றி யோசித்து அதன் பிறகு முடிவிற்கு வருவது நல்லது. குரு பகவானின் பார்வையால் சுபச்செலவு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை இருக்கும். உடல் நிலையிலும் மனநிலையிலும் தெளிவு இருக்கும். புதன் பகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனியும் சூரியனும் சஞ்சரிப்பதால் அவசர வேலைகளைத் தவிர்ப்பது நல்லது. வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தவும். உறவுகளுக்கும் உங்களுக்கும் இந்த நேரத்தில் இடைவெளி ஏற்படலாம். பூர்வீக சொத்து விவகாரத்தில் ஏதேனும் பிரச்னை உருவாகலாம். பிள்ளைகளுக்காக செலவு தோன்றலாம். அனைத்திலும் நிதானமும் கவனமும் தேவை. இந்த நிலையிலும் எல்லாவற்றையும் சமாளித்திடக்கூடிய அளவிற்கு ராகு பகவான் உங்களுக்கு உதவியாக இருப்பார். பிரச்னை என்று வருவதை எல்லாம் எதிர்கொண்டு உங்களால் வெற்றி அடைய முடியும். எதிர்ப்பு விலகும். வழக்கு வெற்றியாகும். பெரியோரின் ஆசிர்வாதமும் உதவியும் உங்களுக்கு கிடைக்கும். விவசாயிகள் கவனமுடன் செயல்படுவது நல்லது. சிறு வியாபாரிகளுக்கும், உழைப்பாளர்களுக்கும் வேலைபளு கூடும். உழைப்பு அதிகரிக்கும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் அக்கறை கூடும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 5.
அதிர்ஷ்ட நாள்: பிப். 15, 18, 24, 27. மார்ச் 6, 9.
பரிகாரம்: அங்காள பரமேஸ்வரியை வழிபட நன்மை உண்டாகும்.
சுவாதி : சரியாக திட்டங்கள் தீட்டி அதன்படி வாழ்ந்து வரும் உங்களுக்கு பிறக்கும் மாசி மாதம் முன்னேற்றமான மாதம். உங்கள் நட்சத்திரநாதன் ராகு பகவான் நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிப்பீர். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலக ஆரம்பிக்கும். வியாபாரத்திலும் தொழிலிலும் எதிரிகளால் ஏற்பட்ட நெருக்கடி விலகும். போட்டியாளர்கள் விலகிச் செல்வர். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். செல்வாக்கு உயரும். குடும்பத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். புதிய முயற்சிகளில் ஈடுபட விரும்புவோர் பிப். 26க்குப் பிறகு வேலைகளைத் தொடங்கலாம். புத பகவானின் சஞ்சாரம் அதன்பிறகு சாதகமாக இருப்பதால் திட்டமிட்ட வேலை நடக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். புதிய முயற்சி பலிதம் ஆகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். மாதம் முழுவதும் ராசிநாதன் சஞ்சாரம் எதிர்மறையாக இருப்பதால் அனைத்திலும் கவனமாக இருந்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் பிறரை நம்பி விடாமல் நீங்களே நேரடியாக இருந்து கண்காணிப்பது லாபத்தை அதிகரிக்கும். உங்கள் வேலைகளை நீங்களே செய்து கொள்வது இந்த மாதத்தில் நல்லது. அரசு வழி முயற்சிகளில் சில பின்னடைவு ஏற்படும். பூர்வீக சொத்து விவகாரத்தில் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். இந்த நேரத்தில் பெரியோர்களை அனுசரித்துச் செல்வதால் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். அரசு பணியில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது அவசியம். மாணவர்கள் பொதுத் தேர்வை மனதில் வைத்து படிப்பது நல்லது. விவசாயிகளுக்கு உழைப்பு அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 6.
அதிர்டநாள்: பிப். 13, 15, 22, 24, மார். 4, 13.
பரிகாரம்: துர்கையை வழிபட சங்கடம் விலகும்.
விசாகம் 1, 2, 3ம் பாதம் : பிறருக்கு ஆலோசனை சொல்வதிலும், திட்டமிட்டு வாழ்வதிலும் முதன்மையான உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். உங்கள் நட்சத்திரநாதன் குரு பகவான் 8 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் செயல்களில் கவனக்குறைவு ஏற்படும். திட்டமிட்ட வேலைகளில் தடுமாற்றம் உண்டாகும். ராசிநாதன் சுக்கிரன் 6ம் இடத்தில் சஞ்சரிப்பதால் மனச் சோர்வு அதிகரிக்கும். ராகு பகவான் 6ம் இடத்தில் சஞ்சரித்து வருவதால் நெருக்கடியில் இருந்து உங்களைப் பாதுகாப்பார். நீங்கள் நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்திக் கொள்ளக்கூடிய அளவிற்கு சூழ்நிலை அமையும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரம் தொழிலில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முயற்சி வெற்றியாகும். உங்கள் முயற்சி ஒவ்வொன்றாக நிறைவேறும். எதிர்பார்த்த பணம் வரும் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். புதிய இடம், வீடு அமையும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனைகளை ஏற்பதும், குடும்பத்தினரை அனுசரித்துச்செல்வதும் நல்லது. புதிய முயற்சிகளில் கவனம் தேவை. வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தவும். பணியாளர்களுக்கு வேலைபளு கூடும். அலுவலகத்தில் சிலருக்கு நெருக்கடி ஏற்படும். எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். வழக்கு சாதகமாகும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம்: மார்ச் 7.
அதிர்ஷ்ட நாள்: பிப். 15, 21, 24. மார்ச் 3, 6, 12.
பரிகாரம்: குரு பகவானை வழிபட நன்மை உண்டாகும்.