பதிவு செய்த நாள்
13
பிப்
2025
10:02
திருக்கழுக்குன்றம்; திருக்கழுக்குன்றத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில், ஆண்டுதோறும் தைப்பூசத்தை முன்னிட்டு, வெவ்வேறு தீர்த்தங்களில், இரண்டு நாட்கள் தெப்போற்சவம் நடைபெறும். தைப்பூச நாளான நேற்று முன்தினம் பகலில், வேதகிரீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்மன் ஆகியோர் சிறப்பு அபிஷேக வழிபாடு கண்டனர்.
தொடர்ந்து, மாலை, அலங்கார சுவாமி, அம்பாள், கோவிலில் இருந்து புறப்பட்டு, மாடவீதிகள் வழியே, சங்குதீர்த்தகுளத்தை அடைந்து, இரவு தெப்பத்தில் எழுந்தருளி, மூன்று சுற்றுகள் வலம் வந்தனர். பக்தர்கள் தரிசித்து, கிரிவலம் சென்று வழிபட்டனர். நேற்று இரவு, கோவில் வளாக ரிஷபதீர்த்தகுளத்தில், சுவாமியர் தெப்போற்சவம் கண்டனர். இதே போல செய்யூர் அருகே உள்ள கடப்பாக்கம் கிராமத்தில் விசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதர் திருக்கோவில் உள்ளது. தைப்பூச தெப்ப திருவிழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை 7:30 மணிக்கு விநாயகர் வழிபாடு செய்யப்பட்டது. மாலை 3:00 மணிக்கு மஹா அபிஷேகம் நடந்தது. முக்கிய நிகழ்வான தெப்ப திருவிழா இரவு 9: 15 மணிக்கு துவங்கியது. கோவில் எதிரே உள்ள குளத்தில் தெப்பம் கட்டப்பட்டு, அதில் சிறப்பு அலங்காரத்தில் காசிவிஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி சுவாமி 3 முறை சுற்றி வந்தனர். கடப்பாக்கம் மற்றும் அதன் சுற்ற வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.