பதிவு செய்த நாள்
14
பிப்
2025
05:02
பழநி; பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச திருவிழா, கொடி இறக்கத்துடன் நிறைவு பெற்றது.
பழநி கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு ரத வீதி, பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா, பிப்.,5,ல் கொடியேற்றத்துடன் துவங்கியது . திருவிழாவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. பிப்.,10 ல் ஆறாம் நாள் திருவிழாவில் மாலை பெரிய நாயகி அம்மன் கோயிலில் வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று இரவு வெள்ளி தேரோட்டம் ரத வீதிகளில் நடந்தது. பிப்.,11ல் புதுத்தேரில் தேரோட்டம் ரதவீதிகளில் நடைபெற்றது.
திரு ஊடல்: இன்று (பிப்.,14.) காலை பெரிய நாயகி அம்மன் கோயிலில் தெய்வானை கோயிலுக்குள் சென்றபின் கோயில் நடையை அடைத்தனர். அதன்பின் ஓதுவார் சிவ நாகராஜன் பாடல்கள் பாடி திருஊடல் நிகழ்ச்சியை நடத்தி வைத்தார். அதன் பின் கோயில் நடை திறந்து வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது.
தெப்பத்தேர்: திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியான தெப்ப தேர் நிகழ்ச்சி, கீழ வடம் போக்கி தெரு துவக்கத்தில் உள்ள தெப்பக்குளத்தில் அழகிய தேர் வடிவமைக்கப்பட்டு மிதக்க விடப்பட்டது. தெப்பம் மூன்று முறை சுற்றி வந்தது. அதில் வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமி எழுந்தருளினார். சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரவு கொடி இறக்குதலுடன் தைப்பூசத் திருவிழா நிறைவு பெற்றது. நிகழ்ச்சியில் இணை கமிஷனர் மாரிமுத்து அதிகாரிகள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.