பதிவு செய்த நாள்
15
பிப்
2025
07:02
திருப்பூர்; கதித்தமலை ஸ்ரீவெற்றிவேலாயுதசாமி கோவிலில் நேற்று, மலை மீது தேரோட்டம் நடந்தது; பக்தர்கள், ‘அரோகரா’ கோஷம் முழங்க தேர் இழுத்தனர்.
திருப்பூர் அருகே ஊத்துக்குளி, கதித்தமலை ஸ்ரீவெற்றி வேலாயுதசாமி கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழா விமரிசையாக நடந்தது. கடந்த, 3ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும் காலை மற்றும் மாலை, சுவாமி திருவீதியுலா நடந்தது. தைப்பூச நாளில், அடிவாரத்தில் உள்ள தேரோட்டம் நடந்தது. அடுத்த நாள், தெப்பத்தேர் உற்சவம் நடந்தது. நேற்று, மலை மீது தேரோட்டம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, காலை தேரில் எழுந்தருளினார்; தொடர்ந்து, மலையை சுற்றி வந்து தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், ‘கந்தனுக்கு அரோகரா’ கோஷம் முழங்க, வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் நிலையை அடைந்ததும் மகா தீபாராதனை நடந்தது; இன்று மஞ்சள் நீர் விழா நடக்க உள்ளது. காங்கயம், சிவன்மலை ஸ்ரீசுப்பிரமணியர் கோவில் தேர்த்திருவிழாவில், ஏராளமான பெண்கள், நேர்த்திக்கடன் செலுத்தினர். தேர்வீதிகளில் அமர்ந்து, தலைவாழை இலையில் அரிசி, பருப்பு, காய்கறிகளை படைத்து வழிபட்டனர். சென்னியாண்டவர் கோவில், மலைக்கோவில் குழந்தை வேலாயுதசாமி கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களில், இன்று மஞ்சள் நீர் விழாவுடன், தைப்பூச தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.