பதிவு செய்த நாள்
06
டிச
2012
11:12
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலில் திருப்பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. தற்போது துவார மண்டபம் கட்டும் பணி துவங்கியது. ஈரோடு மாவட்ட முக்கிய கோவிலாக சென்னிமலை முருகன் கோவில் விளங்குகிறது. இது தான் கந்த சஷ்டி கசவம் அரங்கேற்றமான திருத்தலம். இதனால் முருகபக்ததர்கள் வருகை இங்கு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. வராம் தோறும் செவ்வாய் கிழமை இரவு மட்டுமே ஆயிரக்கணக்கான பக்கதர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மலை மீது அமைந்துள்ள இக்கோவிலில், 1.50 கோடி ரூபாய் செலவில் ஐந்து நிலை ராஜகோபுரம் மற்றும் பல்வேறு திருப்பணிகள் கடந்த, 2005ம் ஆண்டு துவங்கி, ஏழு ஆண்டாக நடக்கிறது. ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு, அதில், 146 உருவங்களில் சுவாமி சிலைகள் வடிவமைக்கும் பணியும் முடிந்தது. பஞ்சவர்ணம் பூசும் பணி விரைவில் துவங்க உள்ளது. திருப்பணி இரவு, பகலாக நடந்து வருகிறது. இதில், 45க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், கோவில் வளாகத்தில் தங்கி பணியாற்றுகின்றனர். மலை மீது கோவில் வளாகத்தில், 1.85 கோடியில் புதிதாக மார்க்கண்டேஸ்வரர் சன்னதி மற்றும் காசிவிஸ்வநாதர் சன்னதி கட்டப்பட்டு, 95 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இப்பணிக்க நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள ஒரு மலைபகுதியில் இருந்து பெரிய, பெரிய கருங்கற்கள் கொண்டு வரப்பட்டு முழுவதும் கருங்கற்களில் வடிவமைத்துள்ளனர். ராசிபுரம் மலைபகுதி கற்கள் சிற்பங்கள் செய்ய ஏற்றதுடன், நீண்ட காலம் சிதையால், இரும்பு போல நீடிக்குமாம். இதனால், இக்கோவில் ஐந்து நிலை ராஜகோபுரம், மார்க்கண்டேஸ்வரர், காசிவிஸ்வநாதர், கன்னிமூல கணபதி சன்னதிகளும் இக்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கற்களில் புதுமையான வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள், சிற்பங்கள் சோழர் காலத்து முறையில் நேர்த்தியுடன் அமைக்கப்பட்டுள்ளது. மூலவர் விமானம் புதுப்பிக்கும் பணியும் ஆறு லட்சம் ரூபாய் செலவில் நிறைவு பெற்றுள்ளது. அதற்கும் வர்ணம் தீட்டும் பணி இறுதியாக நடக்க உள்ளது. எங்கும் இல்லாத வகையில், மதில் சுவர், 80 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. மதில் சுவரின் மேற்பகுதியில் பிரஸ்தரம், கருங்கற்களிலேயே வடிவமைக்கப்படுகிறது. இதில் பல இடங்களில் வேல் மற்றும் மயில் உள்ளது போன்ற தோற்றம் சிலையாக வடிக்கப்படுகிறது. இப்பணிக்கு மட்டும், 36 லட்சம் செலவிடப்படுகிறது. மற்ற கோவில்களில் இந்த பிரஸ்தரம் சிமென்ட் கலவையால் அமைத்து, வர்ணம் தீட்டுவர். இதை பராமரிப்பது சிரமம். இதனால் சென்னிமலையில், பிரஸ்தரம் கருங்கற்களால் அழகிய வேலைபாடுகளுடன் அமைக்கப்படுகிறது. தற்போது துவார மண்டபம் கட்டும் பணி துவங்கியுள்ளது. இதில் பல ஆண்டுகளாக உள்ள கற்துண்கள் சிலவற்றில் பல சுவாமி சிலைகள் இருப்பதால், இதை அப்படியே பயன்படுத்துகின்றனர். இன்னும் ஓராண்டில் திருப்பணி நிறைவாக வாய்ப்புள்ளது. இக்கோவிலுக்கு இதுவரை அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. கட்சிக்கு அப்பாற்பட்ட நபர்களை நியமித்தால் திருப்பணி சிறப்பாக நடக்கும், என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.