திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், நேற்று, அதிகாலை 4:30 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு தங்கவேல், தங்ககிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து மஹா தீபாராதனை நடந்தது. நேற்று வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மற்றும் திருமண முகூர்த்த நாள் என்பதால், வழக்கத்திற்கு மாறாக, காலை முதலே அதிகளவில் வாகனங்களில் மலைக்கோவிலுக்கு வந்தனர். ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பொது வழியில், மூன்று மணி நேரம் கொளுத்தும் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். அதே போல, 100 ரூபாய் தரிசன கட்டணத்திலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து, மூலவரை வழிபட்டனர். பெரும்பாலான பக்தர்கள் இருசக்கர வாகனம், கார், வேன் மற்றும் பேருந்துகள் வாயிலாக மலைக்கோவிலுக்கு சென்றதால், மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், மலைப்பாதையில் பக்தர்கள் நடந்து செல்லவும் சிரமப்பட்டனர். இதையடுத்து, திருத்தணி டி.எஸ்.பி. கந்தன் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் கோவில் ஊழியர்கள் மலைப்பாதையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி போக்குவரத்து நெரிசலை சீரமைத்தனர்.