பதிவு செய்த நாள்
17
பிப்
2025
10:02
அன்னூர்; இறைவனை அகத்தில் காணலாம், என, அன்னூரில் நடந்த ஆன்மீக வகுப்பில் பேரூர் ஆதீனம் பேசினார்.
அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில், திருவாசகக் குழு சார்பில், சிவன் அருள் தியானம் மற்றும் மெய்ப்பொருள் ஆராய்ச்சி வகுப்பு நேற்று நடந்தது. ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி வரவேற்றார். பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் பேசுகையில், "அப்பரடிகள் பாடுகையில், காற்று, ஆகாசம் என எல்லாவற்றிலும் இறைவன் இருக்கிறான் என்று கூறுகிறார். சோழ நாட்டு கோவில்களில், 100, 500, 1000 கால் மண்டபங்zகள் உள்ளன. கோவிலில் இறைவனை தரிசித்த பிறகு இந்த மண்டபங்களில் அமர்ந்து இறைவன் நாமத்தை கூற வேண்டும். கோவிலுக்கு அதிகாலையில் செல்ல வேண்டும். கோவிலில் உழவாரப்பணி செய்ய வேண்டும். தினமும் நமச்சிவாயா அல்லது சிவாய நம என்னும் மந்திரத்தை சத்தமாக ஏழு முறை, மெதுவாக ஏழு முறை, மனதிற்குள் ஏழு முறை கூற வேண்டும். வாய்ப்பிருக்கும்போதும் எல்லாம் இந்த நாமத்தை கூற வேண்டும். இறைவன் நம் அகத்தில் உள்ளான். நமக்குள் உள்ள தெய்வீக தன்மையை வெளிப்படுத்த நாம ஜெபம் முக்கியம். 500 ஆண்டுகள் பழமையான பேரூர் மடம் சார்பில் பாழடைந்த பல கோவில்களில் திருப்பணி செய்யப்படுகிறது. இதுவரை மூன்று கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்," என்றார். ஆன்மீக பேச்சாளர் சரவணன், தியானம், இறைவழிபாடு, நாம ஜெபம் குறித்து பேசினார். திரளான பக்தர்கள், திருவாசகக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.