பதிவு செய்த நாள்
17
பிப்
2025
03:02
தொண்டாமுத்தூர்; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பா.ஜ., சிறுபான்மையினர் அணியின் தேசிய செயலர் வேலூர் இப்ராஹிம் சுவாமி தரிசனம் செய்தார்.
கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளை கலந்து கொள்வதற்காக, பா.ஜ., சிறுபான்மையினர் அணியின் தேசியச் செயலர் வேலூர் இப்ராஹிம் இன்று வந்திருந்தார். இந்நிலையில், நேற்று, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், சுவாமி தரிசனம் செய்ய பா.ஜ., நிர்வாகிகளுடன், வேலூர் இப்ராஹிம் வந்தார். மூலவர் சன்னதி, ஆதி மூலவர் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தார். அதன்பின், வேலூர் இப்ராஹிம் நிருபர்களிடம் கூறுகையில்,"மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடன் வாழவும், நாட்டிலுள்ள அனைத்து மதத்தினரும், அமைதியோடு, நல்லிணக்கத்தோடு வாழவும், நம் தேசம் உலகின் குருவாக மாறுவதற்கும், வளர்ச்சி மிகுந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி செல்வதற்கு, மிக உயர்ந்த நம்பிக்கையின் அடிப்படையில், முருகப்பெருமானை தரிசித்து, பயணத்தை துவங்கியுள்ளேன்.
இந்த மண், ஆன்மிக மண். தமிழகத்தை பொறுத்தவரை, மத வேறுபாடு இல்லாமல், ஒவ்வொருவரும் பிற மதத்தினுடைய நம்பிக்கையை மதிப்பது என்பது காலங்காலமாக நடந்து வரும் ஒரு நற்செயல். அதுதான், திருப்பரங்குன்றத்திலும் நடந்தது. மருதமலையிலும் நடந்து வருகிறது. ஆனால், சில அடிப்படைவாத சக்திகள், தேவையற்ற மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விஷயத்தை முன்னெடுக்கும் போது, தமிழக காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்து, தேவையற்ற ஒரு பதற்றத்தை திருப்பரங்குன்றத்தில் ஆரம்பித்து இருக்கிறார்கள். மருதமலையை போல், திருப்பரங்குன்றமும் புனிதமிக்க மலை. அந்த புனிதத்தை மதங்களை கடந்து நாம் அனைவரும் பாதுகாக்க வேண்டும். இஸ்லாமியர்களும் நம் நல்லுறவை பேணுவதற்காக, நம் தொப்புள் கொடி சொந்தங்களான ஹிந்துக்களின் நம்பிக்கைகளை, உணர்வுகளை மதிக்க வேண்டும் என்பது என்னுடைய நோக்கம். அதனால், மத நல்லிணக்க பயணமாக, மருதமலை வந்தேன். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும். சனாதன தர்மம் என்பது, இந்த மண்ணில் இருக்கிற எல்லா நம்பிக்கைகளையும் மதித்து, அவர்களுக்கு மாண்பு அளிப்பதே ஆகும். ஹிந்து நம்பிக்கைகளை, நம் பண்பாட்டை, கலாச்சாரத்தை இழிவு படுத்துவது தி.மு.க.,விற்கு குறிப்பாக கடவுள் மறுப்பு காட்டுமிராண்டிகளுக்கு உள்ள கொள்கை. அந்த கொள்கைகளை அறவே ஒழிப்பதற்காக, ஆன்மிக பூமியில் நிச்சயமாக தாமரை மலரும்.,"என்றார்.