பதிவு செய்த நாள்
18
பிப்
2025
04:02
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் நகரில், 1,000 ஆண்டுகளுக்கு முன், பல்லவர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள், மத்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது. அவ்வாறு, கைலாசநாதர் கோவில், வைகுண்ட பெருமாள் கோவில், பிறவாதீஸ்வரர் கோவில், இறவாதீஸ்வரர் கோவில் என, ஏழு கோவில்கள், மிக பழமையான கோவில்களாக உள்ளன.
இக்கோவில்களில் சிவராத்திரி அன்று சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இதனால், நகரில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் அன்றிரவு சுவாமியை தரிசிக்க வருவர். காஞ்சிபுரம் கம்மாள தெருவில் உள்ள பிறவாதீஸ்வரர் கோவிலுக்கும் ஏராளமான பக்தர்கள் வருவர். ஆனால், பிறவாதீஸ்வரர் கோவிலில் பெயர் பலகை கூட இல்லை. இங்கு வரும் பக்தர்களுக்கு, கோவில் பெயர் தெரிந்து கொள்ள கூட முடியவில்லை. பல்லவ அரசன் ராஜசிம்மனால், காஞ்சிபுரத்தில் கட்டப்பட்ட கோவில் எனவும், வாமதேவ முனிவர் பூமியில் பிறந்து, காஞ்சிபுரத்திற்கு வந்து சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் எனவும் தல வரலாறு கூறுகிறது. வரலாறும், சிறப்பும் கொண்ட இக்கோவிலுக்கு பெயர்பலகை, தல வரலாறு போன்ற விபரங்களை தொல்லியல் துறையினர் வைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.