ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட கோவில் திருவிழா; கிடாய்கள் வெட்டி விருந்து
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18பிப் 2025 03:02
நத்தம்; நத்தம் அருகே ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட வேட்டைக்காரன் சுவாமி கோவில் திருவிழாவில் 50 கிடாய்கள் வெட்டி நடந்த விருந்தில் ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டனர்.
நத்தம் அருகே உலுப்பகுடி கிராமத்தில் வேட்டைக்காரன் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா வருடந்தோறும் மாசி மாதத்தில் பாரம்பரியமாக நடந்து வருகிறது. இந்த திருவிழாவில் பெண் குழந்தை முதல் வயதான பெண்கள் வரை பங்கேற்க அனுமதி கிடையாது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான படையல் திருவிழா இன்று நடந்தது. இதில் நள்ளிரவு 1 மணிக்கு மேல் சுவாமிக்கு பொங்கல் வைக்கப்பட்டு விழா தொடங்கியது. பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொடுத்த 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு 10-க்கும் மேற்பட்ட அண்டாக்களில் சாதம் மற்றும் ஆட்டுகறி நள்ளிரவு முழுவதும் கிராமத்தார்களால் சமைக்கப்பட்டது. பின்னர் இன்று அதிகாலை 5.45 மணிக்கு சுவாமிக்கு படையல் செய்யப்பட்டது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தது.தொடர்ந்து சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து வந்து கோவில் முன்பு கூடியிருந்த 3 - ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு சில்வர் பாத்திரங்களிலும், டிபன்பாக்ஸ்களிலும் சாதமும்,ஆட்டுக்கறி குழம்பும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை உலுப்பகுடி ஊர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.