திருச்சி; வயலூர் முருகன் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு ஓதுவார் மூர்த்திகளைக் கொண்டு, யாகசாலை பூஜைகளுடன் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது.
திருச்சி வயலூர் முருகன் கோயில் கும்பாபிஷேக விழா யாக பூஜைகளுடன் கடந்த 14 ம் தேதி துவங்கியது. அருணகிரிநாதரை திருவண்ணாமலையில் ஆட்கொண்ட முருகப்பெருமான், திருச்சி வயலூர் கோயிலுக்கு வரவழைத்து திருப்புகழ் இயற்ற வைத்ததாக ஐதீகம். சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோயிலின் ராஜகோபுரம் உட்பட 10க்கும் மேற்பட்ட கோபுரங்களில் திருப்பணிகள் நிறைவு பெற்றது. கோயிலின் உள் மண்டபம், நவகிரகம், மகாலட்சுமி உப சன்னதிகள் புதுப்பிக்கப்பட்டது. நேற்று ஆறு காலை யாகசாலை பூஜை நிறைவடைந்து, இன்று காலை 9:15 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இன்று (19ம் தேதி) அதிகாலை 6ம் கால யாக பூஜை நடைபெற்று, கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மகா கும்பாபிஷேகம், ராஜகோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனுக்கு அரோகரா என கோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர். நாளை முதல் மண்டலாபிஷேகம் துவங்குகிறது.