பதிவு செய்த நாள்
20
பிப்
2025
10:02
உத்தமபாளையம்; உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயில் மாசி மக தேரோட்டம் மார்ச் 12 ல் நடைபெறுகிறது. மார்ச் முதல் தேதி கொடியேற்றம் நடக்கிறது. உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயில் மாசி மக தேரோட்டம் சில ஆண்டுகளாக நடைபெறவில்லை. இந்தாண்டு மாசி மக தேரோட்டம் நடத்த ஹிந்து அறநிலைய துறை அதிகாரிகள், பொதுமக்களும் முடிவு செய்தனர். அதன்படி மார்ச் முதல் தேதியில் கொடியேற்றமும், அதனைத் தொடர்ந்து அனைத்து சமூகத்தினரின் மண்டகப்படி நடைபெறும் . மார்ச் 12 ல் தேராட்டம் நடைபெறுகிறது.
சேதமடைந்த தேரோட்ட வீதி; தேரோடும் வீதிகளில் அம்ரூத் திட்டத்தின் கீழ் குடிநீர் மேம்பாட்டு பணிகளுக்கென வடக்கு, கிழக்கு,மேற்கு ரத வீதிகள் பள்ளம்தோண்டியதால் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. ரோடு பராமரிப்பிற்கென ரூ.2.78 கோடி அரசு அனுமதித்துள்ளது. ஆனால் ரோடு பராமரிப்பு பணி துவங்கவில்லை. பைப் லைன் பதித்துள்ள பகுதியில் ஆர்.சி.பணியை தற்போது துவக்கி உள்ளனர். இப் பணிமுடிந்த பின் ரோடு அமைக்கப்படும். மார்ச் 12ல் தேரோட்ட தேதி நிர்ணயித்து நிலையில் ரோடு மோசமாக இருப்பதால் மண்டகப்படி எப்படி நடத்துவார்கள் என்பது தெரியவில்லை.
தனி செயல் அலுவலர் இல்லை; கோயில் செயல் அலுவலர் இளஞ்செழியன் பணி ஓய்வு பெற்று சென்ற பிறகு, இக் கோயிலுக்கு செயல் அலுவலர் நியமிக்கவில்லை. ஆண்டிபட்டி செயல் அலுவலர், கம்பம் செயல் அலுவலர் என பலர் பொறுப்பில் இருந்தனர். தற்போது பெரியகுளம் பாலசுப்ரமணியர் கோயில் செயல் அலுவலர் சுந்தரி கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தேர் பராமரிப்பு பணி செய்யவில்லை. ரோடு பராமரிப்பு பணிகளும் நடைபெறவில்லை. ரோடு அமைக்க மதிப்பீடு தயாரித்தல், டெண்டர் கோருதல், நிர்வாக அனுமதி பெறுதல், வேலை அனுமதி வழங்குதல் போன்ற பணிகளை பேரூராட்சி தரப்பில் மேற்கொண்டதாக தெரியவில்லை.