பதிவு செய்த நாள்
20
பிப்
2025
11:02
பெங்களூரில் இருந்து 60 கி.மீ., தொலைவில் தொட்டபல்லாபூரில் அமைந்துள்ள மாகாளி துர்கா மலை. மாநிலத்தில் இந்த மலையேற்ற பகுதி மட்டும் தான், ரயில் நிலையம் அமைந்துள்ளது. மாகாளிதுர்கா ரயில் நிலையத்தில் இருந்து இறங்கி, இரண்டு கி.மீ., துாரத்தில் உள்ள மலைக்கு நடந்தே செல்லலாம்.
இம்மலைக்கு மாகாளிதுர்கா என பெயர் வர இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று, ஆரோக்கியத்துக்கு ஏற்ற பானம் தயாரிக்கும் ‘மாகாளி பேரு’ என்ற மாகாளி வேரில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து, ரத்தத்தை சுத்தம் செய்கிறது என்றும்... மற்றொன்று, 1800களில் மாகாளிராயா மன்னர், உணவு தானியங்களை இந்த கோட்டையில் வைத்திருந்ததாலும், மாகாளிதுர்கா என்ற பெயர் வந்ததாக என்றும் கூறப்படுகிறது. இம்மலையில் உள்ள கோட்டை, முதலில் விஜயநகர பேரரசு ஆட்சிக் காலத்தில் இருந்தது. அவருக்கு பின் நாயக்கர்கள், சத்ரபதி சிவாஜியின் தந்தை சஹாஜி போஸ்லே ஆகியோரின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது. மாகாளி துர்காவை அடைய இரண்டு வழிகள் உள்ளன. மாகாளிதுர்கா ரயில் நிலையத்தில் இருந்தே துவங்கலாம். ரயில் தண்டவாளத்தை ஒட்டி நடப்பது புது அனுபவத்தை தரும். அதேவேளையில் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். மலையின் அடிவாரத்தில் குண்டமகெரே ஏரி அமைந்து உள்ளது. மலையில் இருந்து பார்க்கும்போது ‘தென் அமெரிக்கா’வின் கண்டம் போன்று தென்படும்.
மலை உச்சியில் கோட்டை, அன்றைய காலத்துக்கு உங்களை கொண்டு செல்லும். இங்கு கட்டப்பட்டுள்ள மாகாளி மல்லேஸ்வரர் கோவில், சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். மலையேற்றம் செய்பவர்கள் இங்கு சிவனை தரிசிக்கலாம். கோடை காலங்களில் சேறும் சகதியுமாக இருக்கும். பாறைகளும் வழுக்கும். அந்நேரத்தில் பயணிக்கும் போது பாதுகாப்புடன் செல்ல வேண்டும். வெயில் காலத்தில் குடை, தொப்பி, கூளிங் கிளாஸ், குடிநீர் பாட்டில், ஊட்டச்சத்து பானம், திண்பண்டங்கள் எடுத்துச் செல்லலாம். பருத்தி ஆடை அணிவது நல்லது. இங்கு மலையேற்றம் செய்ய விரும்பினால், https://www.karnatakaecotourism.com என்ற இணையதளத்துக்கு சென்று கட்டணம் செலுத்த வேண்டும். அதற்கான ரசீதை, வனத்துறை அதிகாரிகளிடம் காண்பித்து அனுமதி பெற வேண்டும்.
எப்படி செல்வது?; பெங்களூரில் இருந்து ரயிலில் செல்வோர், மாகாளிதுர்கா ரயில் நிலையத்தில் இறங்கினாலே போதும். அங்கிருந்து நடந்தே செல்லலாம்.பஸ்சில் செல்வோர் தொட்டபல்லாபூர் பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து டாக்சி, ஆட்டோவில் செல்லலாம். – நமது நிருபர் –