பதிவு செய்த நாள்
21
பிப்
2025
11:02
திருப்பூர்; சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் தேர்த்திருவிழா நேற்று நிறைவு பெற்றது. மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் இருந்து மலை கோவிலுக்கு சுவாமி எழுந்தருளினார்.
காங்கயம், சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 2ம் தேதி வீரகாளியம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதில், 11, 12, 13 ஆகிய மூன்று நாட்கள் தேரோட்டம் நடந்தது. 16ம் தேதி நந்தவனத்தோட்டத்தில் உள்ள தெப்ப குளத்தில் பரிவேட்டை, தெப்ப உற்சவம் நடந்தது. 17ம் தேதி மகா தரிசனம் நடந்தது. தைப்பூச நிறைவு நாளான நேற்று மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. தொடர்ந்து, மலை அடிவாரத்தில் இருந்த நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் இருந்து சுப்ரமணியர், வள்ளி தெய்வானையுடன் பல்லக்கில் மலை கோவிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. இதில், பக்தர்கள் வழி நெடுகிலும் சுவாமிக்கு ஆரத்தி எடுத்தனர். அடிவாரத்தில், ஆயிரம் தேங்காய்கள் உடைக்கப்பட்டு நேர்த்தி கடன் செலுத்தினர். மலை கோவிலில் அபிஷேகமும், சிறப்பு வழிபாடும் நடந்தது. இரவு திருவிழா கொடி இறக்குதல், பாலிகை நீர்த்துறை சேர்தலுடன் சிவன்மலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா நிறைவு பெற்றது.