பதிவு செய்த நாள்
21
பிப்
2025
11:02
விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி அருகே மேல்பாதி தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் அனைத்து சமுதாயத்தினரும் வழிபடலாம் என்ற கோர்ட் உத்தரவைத் தொடர்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த மேல்பாதி தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில், 2023ம் ஆண்டு ஜூன் 7ம் தேதி, ஒரு சமுதாயத்தினர் கோவிலுக்குள் செல்வதை கிராம மக்கள் தடுத்தனர். இதனால் பிரச்னை ஏற்பட்டதை தொடர்ந்து, ஆர்.டி.ஓ., 145 தடை உத்தரவு பிறப்பித்தார். அதையடுத்து, சம்மந்தப்பட்ட கோவில் மூடி சீல் வைக்கப்பட்டது. பின்னர், கடந்த 2024ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி முதல் கோவில் திறக்கப்பட்டு பூசாரி மூலம் ஒரு கால பூஜை மட்டும் நடத்தப்பட்டது. இந்நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தில் நேற்று கோவில் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. ஹிந்து சமய அறநிலையதுறை அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன், வளவனுார் இன்ஸ்பெக்டர் பாண்டியன், வி.ஏ.ஓ., ரமேஷ் ஆகியோர் ஆஜராகினர். வழக்கின் நிலை குறித்துகாவல் துறையிடம் நீதிபதி இளந்திரையன் விசாரணை நடத்தினார். முடிவில், தற்போது ஆர்.டி.ஓ.,வால் போடப்பட்ட 145 தடை உத்திரவை ரத்து செய்தும் , அனைத்து சமுதாயத்தினரும் கோவிலுக்குள் சென்று வழிபடலாம் எனவும் உத்திரவு பிறப்பித்தார். மேலும,் அனைத்து சமுதாயத்தினரையும் அழைத்து சமாதானம் கூட்டம் நடத்தி கோர்ட் உத்தரவை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நேற்று விழுப்புரம் எஸ்.பி., சரவணன் உத்தரவின் பேரில் வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் தங்க பாண்டியன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் கோவில் முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.