கோமாளி அரங்கன் கோவில் பக்தர்களின் பாதயாத்திரை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25பிப் 2025 11:02
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டியில் கோமாளி அரங்கன் கோவில் பக்தர்களின் பாதயாத்திரை விழா நடந்தது. வீரபாண்டி மாரியம்மன் கோவில் ஸ்ரீ ராமர் பஜனை குழு சார்பில் ஒன்னிபாளையத்தில் உள்ள கோமாளி அரங்கன் திருக்கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் பாதயாத்திரை செல்வது வழக்கம். நடப்பு ஆண்டுக்கான விழா கணபதி பூஜையுடன் தொடங்கியது. இதை ஒட்டி நடந்த பாதயாத்திரை விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் கருடாழ்வார் மற்றும் பெருமாள் உற்சவ மூர்த்திகளுடன் திருத்தேரை அலங்கரித்து, பஜனையுடன் பாதயாத்திரை தொடங்கினர். சாமநாயக்கன்பாளையத்தில் உள்ள ஆண்டாள் கோயிலிலும், காளி பாளையத்தில் உள்ள திருமலைராயபெருமாள் கோவிலிலும், ஒன்னிபாளையத்தில் உள்ள விநாயகர் கோயிலிலும் இக்குழுவினருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மதியம், 1:00 மணி முதல், 3:00 மணி வரை பஜனைகள் நடந்தன. கோமாளி அரங்கனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டு, விழாவில் பங்கேற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.