பதிவு செய்த நாள்
25
பிப்
2025
11:02
திருப்பூர்; மாசி மாதம் வரும் மகா சிவராத்திரி நாளில், சிவாலயங்களில் இரவு முழுவதும் சிறப்பு தரிசனம் நடப்பது வழக்கம். மாலை துவங்கி, விடியற்காலை வரை, நான்கு கால சிவராத்திரி பூஜைகள் நடைபெறும்.
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சிவராத்திரி அன்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அதற்காக, கோவில் வளாகத்தில், பக்தர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகள் துவங்கியுள்ளன. மாலை, 6:30 மணிக்கு முதல் கால அபிேஷக மற்றும் அலங்காரம்; இரவு, 9:00 மணி, நள்ளிரவு, 12:30 மணி, அதிகாலை, 4:00 மணி ஆகிய நேரங்களில் மகா அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடக்கின்றன. குறிப்பாக, மூன்றாவது காலத்தில் நடைபெற உள்ள, மகாலிங்கோத்பவர் அபிேஷகத்தை பார்ப்பது சிறப்பு வாய்ந்தது. வரும், 27ம் தேதி காலை, பள்ளியெழுச்சி பூஜையுடன் சிவராத்திரி பூஜைகள் நிறைவு பெறும்.
திருப்பூர் எஸ்.பெரியபாளையம் ஸ்ரீஆவுடைநாயகி உடனமர் சுக்ரீஸ்வரர் கோவிலில், மகா சிவராத்திரி விழா நாளை நடைபெற உள்ளது. மாலை 6:00 மணிக்கு துவங்கி, நான்கு கால சிவராத்திரி அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் விமரிசையாக நடைபெறும். சிவாச்சாரியார்களும், பக்தர்களும், இரவு முழுவதும் கண்விழித்து, தேவாரம், திருவாசகம் உட்பட, பன்னிரு திருமுறைகளை பாராயணம் செய்து, சிவபெருமானை தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.