பதிவு செய்த நாள்
25
பிப்
2025
12:02
மஹாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் ஷீரடியில் பிரசித்தி பெற்ற, ஷீரடி சாய்பாபா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். வயோதிகம் உள்ளிட்ட காரணங்களால் ஷீரடிக்கு செல்ல முடியாதவர்கள், தங்கள் ஊர்களில் உள்ள சாய்பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்கின்றனர்.
பெங்களூரில் ஷீரடி சாய்பாபா கோவில் மாதிரியில் ஒரு கோவில் உள்ளது. அந்த கோவிலை பற்றி பார்க்கலாம். பெங்களூரின் குண்டலஹள்ளி கேட் முனேகொலலு ஷீரடி சாய்நகரில் உள்ளது ஸ்ரீ ஷீரடி சாய் மந்திர். இந்த கோவில் ஸ்ரீ ஷீரடி சாய் சேவா டிரஸ்ட் சார்பில், கடந்த 2005ம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி விஜயதசமி அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த 2007ல், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து சாய்பாபா சிலை கொண்டு வரப்பட்டு, விஜயதசமி அன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த கோவில் மொத்தம் 3 தளங்களை கொண்டது. கோவில் தரைதளத்தில் இடதுபுறத்தில் விநாயகர் கோவிலும், வலதுபுறத்தில் தத்தாத்ரேயா கோவிலும் உள்ளது. சாய்கோடி ஸ்துாபத்தை தவிர, தியான மண்டபம், துனி எனும் புனித நெருப்பு ஆகியவை உள்ளன.
சாய்கோடி ஸ்துாபம் ஷீரடியில் இருந்து நேரடியாக கொண்டு வரப்பட்ட மண்ணை நிரப்பி, 12 அடி உயரத்திற்கு கட்டப்பட்ட சுவர்களால் சூழப்பட்டு உள்ளது. சாய்கோடி பகவான், சாய்பாபாவின் சிலை, அதிர்வு மற்றும் சக்தியை பெற, பாபாவின் பாதம் பூமியை தொடும் வகையில் நிறுவப்பட்டு உள்ளது. இரண்டாவது மாடியில் தத்தாத்ரேய பீடம், தட்சிணாமூர்த்தி பீடம், சாய் பீடம் உள்ளன. இந்த மூன்று பீடங்களும் தனித்துவமானவை. இந்த கோவிலில் மட்டுமே மூன்று பீடங்களும் காணப்படுகின்றன. வியாழக்கிழமை தவிர ஒவ்வொரு நாளும் தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையும்; மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும். வியாழக்கிழமை மட்டும் காலை 6:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையும், மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையும் பூஜை நடக்கிறது. வியாழக்கிழமை தோறும் இரவு 7:30 மணிக்கு சாவடி ஊர்வலம் நடக்கிறது.
மாதந்தோறும் சங்கட ஹர சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. விஜயதசமி நாளில் கோவில் ஆண்டுவிழா, குரு பூர்ணிமா, ஸ்ரீராமநவமி, உகாதி பண்டிகை என கோவிலில் முக்கிய பண்டிகைகள் ஆகும். சாய்பாபாவை தரிசனம் செய்தால், வேண்டிய வரம் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து குண்டலஹள்ளி கேட்டிற்கு அடிக்கடி பி.எம்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ் நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் துாரம் பயணித்தால் கோவிலை சென்றடையலாம். – நமது நிருபர் –