பதிவு செய்த நாள்
25
பிப்
2025
12:02
அவிநாசி; அவிநாசி தாலுகா, வேலாயுதம்பாளையத்தில் ஸ்ரீ ஆகாசராயர் கோவில் உள்ளது. அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலின் வரலாற்று தொடர்புடைய கோவில் இது. கும்பாபிஷேக திருப்பணிகள் துவங்கி கடந்த ஒன்றரை ஆண்டாகியும் மந்த நிலையில் உள்ளது.
உள்பிரகாரத்தில் கட்டப்படும் சுற்றுச்சுவருடன் கூடிய அலங்கார வளைவு ஒரு சமூகத்தினருக்கு எதிரானது என்ற பொய்ப்பிரசாரமும் இதற்குக் காரணமாக அமைந்துள்ளதாக பக்தர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், நேற்று புதுப்பாளையம், கருணைபாளையம், வேலாயுதம்பாளையம், ராயம்பாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கோவிலில் கூடி ஆலோசித்தனர். ‘‘காத்தவராயர் சன்னிதி முன்பு தீர்த்தம் தெளித்து உத்தரவு பெற்று சென்று கிடா வெட்டி நேர்த்திக்கடன் நிறைவேற்றுவது, விருந்து தயாரிப்பது என்பது ஆண்டாண்டு காலமாக உள்ளது. இந்த நடை முறை அனைத்து சமுதாயத்துக்கும் உண்டான பொது உரிமை. இதை யாரும் தடுக்கவும் இல்லை. தடுக்கவும் முடியாது. இரவு நேரங்களில் கோவில் மண்டபங்களில் மக்கள் கூட்டமாக தங்கும் சமயத்தில் பாதுகாப்பு கருதி கோவிலின் துாய்மை மற்றும் அதன் புனிதம் காக்கும் வகையில் அறநிலையத்துறை அனுமதியின் பேரில் காம்பவுண்ட் சுவர் கட்டப்படுகிறது. இதை தீண்டாமைச்சுவர் என சிலர் விஷமத்தை விதைக்கின்றனர். ‘‘கோவிலில் நிர்வாகத்தை திறம்பட செயல்படுத்திட அனைத்து தரப்பு மக்களும் பங்கெடுக்கக்கூடிய வகையில் அறங்காவலர்கள் நியமனத்தை போர்க்கால அடிப்படையில் அறநிலையத்துறை நிர்வாகம் செய்ய வேண்டும். கோவில் பற்றி வீண் வதந்திகளை பரப்புபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ஒவ்வொரு கிராமப் பகுதியில் இருந்தும், ஐந்து பிரதிநிதிகள் என்ற வகையில் இணைந்து திருப்பணிகள் அனைத்தும் நடைபெற்று கும்பாபிஷேகம் விரைந்து நடத்திட உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து கிராம மக்கள் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மாநில செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.