பதிவு செய்த நாள்
25
பிப்
2025
12:02
தேவதானப்பட்டி; மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா நாளை முதல் துவங்குகிறது. பக்தர்கள் வசதிக்காக 24 மணி நேரமும் 15 சிறப்பு பஸ்கள் இயக்கம்.
தேவதானப்பட்டியிலிருந்து 3 கி.மீ., தூரம் மஞ்சளாற்றின் கரையோரம் ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயில். இக்கோயிலில் மூடப்பட்ட கதவிற்கு மூன்று கால பூஜை நடக்கிறது. தீபாரதனைக்கு முன்பு தேங்காய் உடைக்கப்படுவதில்லை. வாழைப்பழம் உரிக்கப்படுவதும் இல்லை. குடங்களில் நிறைந்து காணப்படும் நெய்யினை எறும்புகள் நெருங்குவதில்லை. பகலிரவு அணையாத நெய்விளக்கு எரிகின்றது. தினமும் மாலை உறுமி, சங்கு, சேகண்டிகள் முழங்க சாயரட்சை பூஜை நடக்கிறது. குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் அம்மனை குலதெய்வமாக நினைத்து பக்தர்கள் வணங்கி வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு பகுதியிலிருந்தும் மாசி மகா சிவராத்திரி திருவிழாவிற்கு ஏராளமானோர் வந்து செல்வர். பிப்.4ல் கொடிமரம் நடப்பட்டது. நாளை பிப்., 26 முதல் திருவிழா துவங்கி மார்ச் 5 வரை 8 நாட்கள் நடக்கிறது.
பஸ் வசதி: நாளை முதல் பெரியகுளம், ஆண்டிபட்டி, வத்தலகுண்டு பகுதியிலிருந்து தலா 5 பஸ்கள் வீதம், 15 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. 24 மணி நேரம் பஸ் வசதி. தற்காலிக பஸ் டெப்போ கோயில் அருகே அமைக்கும் பணி நடக்கிறது. பஸ்கள் தேவதானப்பட்டி அரிசி கடை வழியாக கோயிலுக்கு சென்று, அட்டணம்பட்டி பிரிவு வழியாக வெளியேற வேண்டும். 82 தூய்மை பணியாளர்கள், 4 மேற்பார்வையாளர்கள் குழு அமைத்து சுழற்சி முறையில் தூய்மை பணி, மருத்துவக்குழு, தடையில்லா மின்சாரம், கோயில் வளாகத்தில் புறக்காவல் நிலையம் அமைத்து சுழற்சி முறையில் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பிக்பாக்கெட் திருடர்கள், பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் தங்க செயினை கூட்ட நெரிசலை பயன்படுத்தி நூதன பெண் திருடர்களை பிடிக்க 24 மணி நேரம் மப்டியில் ஆண், பெண் போலீசார்கள் 20 பேர் பணியில் ஈடுபட உள்ளனர்.ஏற்பாடுகளை செயல்அலுவலர் வேலுச்சாமி செய்து வருகிறார்.