பதிவு செய்த நாள்
27
பிப்
2025
11:02
திருவள்ளூர் மாவட்டத்தில், பல்வேறு சிவன் கோவில்களில், மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது. திருவள்ளூர் பூங்கா நகர் சிவ – விஷ்ணு கோவில், பெரியகுப்பம் அருணா சலேஸ்வரர், திருப்பாச்சூர் தங்காதலி அம்மன் உடனுறை வாசீஸ்வரர், நத்தம் ஆனந்தவல்லி அம்பிகை சமேத திருவாலீஸ்வர், பேரம்பாக்கம் சோளீஸ்வரர், கூவம் திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திரிபுராந்தகர், மப்பேடு சீங்கீஸ்வரர், மணவாளநகர் மங்கள ஈஸ்வரர், வெங்கத்துார் வேதகிரீஸ்வரி சமேத வேதகிரீஸ்வரர், திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர், பெருமாள்பட்டு மங்களாம்பிகை சமேத திருக்கண்டீஸ்வரர் கோவில் உட்பட மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களிலும் நேற்று மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடந்தது. நேற்று காலை 5:00 மணிக்கு சிவன் கோவில்களில் திருப்பள்ளியெழுச்சியுடன் மகா சிவராத்திரி விழா துவங்கியது. அதன் பின், மாலை 6:00 மணிக்கு முதல் கால பூஜையும், இரவு 9:00 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், நள்ளிரவு 12:00 மணிக்கு மூன்றாம் கால பூஜையும் இன்று அதிகாலை 4:00 மணிக்கு நான்காம் கால பூஜையும்மகா அபிஷேகமும்தீபாராதனையும் நடந்தது.
திருத்தணி; திருத்தணி பழைய தர்மராஜா கோவில் தெருவில் உள்ள சதாசிவ லிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று மகா சிவராத்திரி விழாவையொட்டி, மூலவருக்கு நான்கு கால சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. நேற்று, காலை 9:30 மணிக்கு, பெரிய தெருவில் விநாயகர் கோவிலில் இருந்து, 108 பால்குட ஊர்வலம் புறப்பட்டது. சதாசிவலிங்கேஸ்வரர் கோவிலை அடைந்தது. மதியம் 12:00 மணிக்கு மூலவருக்கு, 108 பால்குட அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருத்தணி நந்தி ஆற்றின்கரையோரம் உள்ள வீரட்டீஸ்வரர் கோவிலில், லட்சுமாபுரம் வெங்கடேசபெருமாள் தரிசித்த சிவன் கோவில், கே.ஜி.கண்டிகை பிரம்மகைலாசம் கோவில், மலைக்கோவிலில் சதாசிவனேஸ்வரர் கோனையில் சிவபெருமான், வேலஞ்சேரி கிராமத்தில் உள்ள சர்வ மங்கள ஈஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் சிவராத்திரி விழாவையொட்டி, ஆறு கால சிறப்பு பூஜைகள் நடந்தன.
கும்மிடிப்பூண்டி; கவரைப்பேட்டை அடுத்த அரியத்துறை கிராமத்தில் உள்ள வரமூர்த்தீஸ்வரர், பஞ்செட்டி அகத்தீஸ்வரர், சுண்ணாம்புகுளம் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், புதுகும்மிடிப்பூண்டி பாலீஸ்வரர், காளத்தீஸ்வரர், சந்திரசேகர சுவாமி, கும்மிடிப்பூண்டி முக்கோட்டீஸ்வரர், தேர்வழி தான்தோன்றீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில், நேற்று மாலை முதல், சிவராத்திரி விழா துவங்கியது. ஏராளமான பக்தர்கள் நான்கு கால பூஜைகளில் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டனர். அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தன. சிறப்பு அன்னதானம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஆர்.கே. பேட்டை; ராசபாளையம் பாலகுருநாதீஸ்வரர் கோவிலில் சிவராத்திரியை ஓட்டி நேற்று சிறப்பு உற்சவம் நடந்தது. மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில், நான்கு கால பூஜையை முன்னிட்டு, சிவ பக்தர்கள் இரவு முழுதும் கண்விழித்து நான்கு காலஅபிஷேகங்களையும் கண்டு சிவாய நம என்ற கோஷத்துடன் சிவனை வழிபட்டனர். -– நமது நிருபர் குழு –