பதிவு செய்த நாள்
03
மார்
2025
04:03
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோற்சவ பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. செங்கை மாவட்டத்தில் கோவில் நகரங்களில் ஒன்றாக திருப்போரூர் விளங்குகிறது. இங்கு அறுபடைவீட்டிற்கு நிகரான மும்மூர்த்தி அவதாரத்தை பிரதிபலிக்கும் விதத்தில் மூலவர் கந்தசுவாமி சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இக்கோவிலில் கந்தசஷ்டி, மாசி பிரம்மோற்சவம், மாணிக்கவாசகர் உற்சவம், வசந்த விழா உள்ளிட்ட சிறப்பு விழாக்கள் நடக்கின்றன. ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அதிகாலை 4:30 மணியளவில், கோவில் வட்ட மண்டபத்தில் உற்சவர் கந்தசுவாமி பெருமான் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களின் கந்தா, சரவணா, அரகரா கோஷத்துடன் அதிகாலை 5:30 மணிக்கு உற்சவ கொடி ஏற்றப்பட்டது. பின், உற்சவர் கந்தசுவாமி பெருமான், வள்ளி, தெய்வானையுடன் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் ராஜலட்சுமி, செயல்அலுவலர் குமரவேல், மேலாளர் வெற்றிவேல் செய்திருந்தனர்.