பதிவு செய்த நாள்
03
மார்
2025
04:03
திருவாலங்காடு; திருவாலங்காடு ஒன்றியம், பாகசாலை கிராமத்தில், கொசஸ்தலையாற்றின் தென் புறத்தில் அமைந்துள்ளது பாலசுப்ரமணிய சுவாமி கோவில். இக்கோவிலில், ஆண்டுதோறும், மாசி பிரம்மோற்சவ விழா, 10 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இன்று விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக, நேற்று காலை 9:00 மணிக்கு, கற்பக விநாயகர் சிறப்பு வழிபாடும், மாலை 7:30 மணிக்கு, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் மற்றும் பூர்வாங்க நிகழ்ச்சிகளும், அதன் பின், கற்பக விநாயகர் வீதியுலாவும் நடந்தது. அதை தொடர்ந்து, 10 நாட்களுக்கு நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில், வினையறுக்கும் வேல் பூஜை, 9ம் தேதி காலையும், 10ம் தேதி வள்ளி, தெய்வானை, முருகன் திருக்கல்யாணமும், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாசி மகம், 12ம் தேதி நடைபெறவுள்ளது. அன்று மாலை தீர்த்தவாரியும்; இரவு இந்திர விமானத்தில் உற்சவர் வீதியுலாவும் நடைபெறும். 13ம் தேதி, விடையாற்றி மற்றும் சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெற உள்ளது.