பதிவு செய்த நாள்
10
மார்
2025
10:03
திருவொற்றியூர்; திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் கோவில், மாசி பிரமோத்சவ விழா, 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய திருவிழாவான, தேரோட்டம், இன்று காலை, 9:05 – 10:10 மணிக்குள் நடக்கிறது. இதனிடையே, மண்ணடி, பவளக்கார தெருவில் இருந்து, வெள்ளி ரதத்தில், பழைய தண்டாயுதபாணி, புதிய தண்டாயுதபாணி சுவாமிகள், திருவொற்றியூர் நோக்கி வரும் ஊர்வலம், நேற்று காலை துவங்கியது. ஊர்வலம் மண்ணடி, ராயபுரம், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை – திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக, தெற்கு மாடவீதியில் உள்ள, நகரத்தார் மண்டபத்தை நேற்றிரவு வந்தடைந்தது. ஊர்வலத்தில், நகரத்தாரர் சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், பாடல்கள் பாடிய படி, வாத்திய கருவிகள் இசைத்தபடி பங்கேற்றனர். பின், மண்டபத்தில், பழைய – புதிய தண்டாயுதபாணி சுவாமிகள் எழுந்தருளினர். அதன்படி, மூன்று நாட்கள் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் சுவாமி, 12ம் தேதி, கல்யாண சுந்தரர் – திரிபுரசுந்தரி திருக்கல்யாணம் காண்பதாக ஐதீகம். கல்யாண உற்சவம் முடிந்த அடுத்த நாள், 13ம் தேதி மாலையில், மீண்டும் மண்ணடி பவளக்காரன் தெருவுக்கு, தண்டாயுதபாணி சுவாமி எழுந்தருள்வார்.