பதிவு செய்த நாள்
10
மார்
2025
11:03
பாலக்காடு; பாலக்காடு அருகே கோட்டாயி பார்த்தசாரதி கோவிலில், செம்பை ஏகாதசி சங்கீத உற்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று, நந்தினி மற்றும் ஆனையடி பிரசாத் ஆகியோரின் சங்கீத கச்சேரி நடந்தது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு, நடப்பாண்டு மாசி மாத ஏகாதசி உற்சவம் கடந்த 6ம் தேதி கொடியேற்றப்பட்டது. உற்சவத்தினை, நேற்று முன்தினம் பிரபல இசைக்கலைஞர் டி.வி., கோபாலகிருஷ்ணன் துவக்கி வைத்து, சங்கீத கச்சேரி நடத்தினார். தொடர்ந்து சுகுமாரி நரேந்திர மேனனின் சங்கீதக் கச்சேரி நடந்தது. இரண்டாம் நாளான நேற்று மாலை, 6:30 மணிக்கு நந்தினியின் சங்கீதக்கச்சேரி நடந்தது. இவருக்கு பாலக்காடு சுவாமிநாதன் (வயலின்), பாலக்காடு மகேஷ்குமார் (மிருதங்கம்), ஆலுவா ராஜேஷ் (கடம்), வெள்ளிநேழி ரமேஷ் (முகர்சங்) ஆகியோர் பக்கவாத்தியம் வாசித்தனர். தொடர்ந்து, 7:30 மணிக்கு ஆனையடி பிரசாத்தின் சங்கீதக் கச்சேரி நடைபெற்றது. ஏகாதசி உற்சவ நாளான இன்று (10ம் தேதி) காலை, 8:30 மணிக்கு உஞ்சவிருத்தி பஜனை, மண்ணுார் ராஜகுமாரன் உண்ணி தலைமையில் பஞ்சரத்ன கீர்த்தனை, இளம் கலைஞர்களின் சங்கீத ஆராதனை நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு பத்மேஷின் புல்லாங்குழல், பாதிரியார் பவுல் பூவத்திங்கள், பிரகாஷ் உள்ளியேரி குழுவின் ஹார்மோனியம், இரவு, 8:30 மணிக்கு விஜய் ஜேசுதாஸ் கச்சேரி, 9:30க்கு அனுாப், பார்வதி திலீப் ஆகியோரின் வயலின் கச்சேரியும் நடக்கிறது. நாளை (11ம்) ஏகாதசி உற்சவம் நிறைவடைகிறது.