கொல்லங்குடி காளி கோவிலில் பங்குனி விழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மார் 2025 12:03
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடி அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளி கோவிலில் பங்குனி சுவாதி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஹிந்து அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில் பங்குனி சுவாதி திருவிழா மார்ச் 8ல் அனுக்கை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை 9:15 முதல் 10:15 மணிக்குள் கோவில் தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. இரவு 7:15 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டியவுடன், காப்பு கட்டி பக்தர்கள் விரதத்தை துவக்கினர். தினமும் இரவு அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறும். மார்ச் 16ல் இரவு தங்க குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலா நடக்கிறது. மார்ச் 17 அதிகாலை தேரில் அம்மன் எழுந்தருள்வார். அன்று காலை 9:15 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். மார்ச் 18ல் காலை 10:00 மணிக்கு தீர்த்தவாரி உற்சவமும், இரவில் புஷ்ப பல்லக்கில் மின்விளக்கு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா வருவார். மார்ச் 19 காலை 10:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், அன்னதானத்துடன் விழா நிறைவு பெறும். ஏற்பாடுகளை செயல் அலுவலர் மாரிமுத்து செய்து வருகிறார்.