மக நட்சத்திரம் பெருமாளுக்கும் உகந்த நாள். நீர் நிலை உள்ள இடங்களில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுவது வழக்கம். புனித தீர்த்தங்களில் எல்லாநாட்களும் நீராடலாம் என்றாலும், குறிப்பிட்ட நாட்களில் நீராடுவது சிறப்பானதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. மகாமக குளத்தில் நீராடுவதற்கு அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, வெள்ளிக்கிழமை, கார்த்திகை நட்சத்திரம், சிவராத்திரி, மாசிமகம், மகாமகம் ஆகிய நாட்கள் சிறப்பானதாகும்.புனிதமான மகாமக தீர்த்தம் கும்பகோணத்தில் மூன்று ஏக்கர் பரப்பில் மகாமகக்குளம் அமைந்துள்ளது. ஒருமுறை உலகம் அழிய இருந்த காலத்தில், படைப்புக்கலன் தாங்கிய அமுதம் நிரம்பிய கும்பத்தை சிவன் அழித்தார். அவ்வாறு பெருகிய அமுதமே இந்தக் குளம் என்று சொல்வதுண்டு. மாசிமகத்தன்று இக்குளத்தில் நீராடுவது புனிதமானது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகம் மிகவும் சிறப்பானது. இக்குளத்தில் பிரம்மா, அஷ்டதிக்பாலகர்கள், நவகன்னியரான கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதா, சரஸ்வதி, காவிரி, குமரி, பயோடினி, சரயு நதிகள் நீராடி புண்ணியம் அடைந்தன. பவுர்ணமியன்று நீராடுவோருக்கு ஏழேழு பிறவிக்கும் நன்மை ஏற்படும். மாசித்திருவிழாவின் பத்தாம்நாளில் கும்பேஸ்வரர் பஞ்சமூர்த்தியுடன் இந்த குளக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தம் வழங்குகிறார்.
இப்படி தீர்த்தவாரிக்கு பெயர் பெற்ற 108 திவ்யதேசங்களில் ஒன்று மகாபலிபுரம். இங்கு மாசி மகத்தன்று நீராடுவது ராமேஸ்வரத்தில் நீராடிய பலனைத் தரும். இதற்குக் காரணமானவர் புண்டரீக மகரிஷிதான். திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பெருமாளின் காலடியில் அன்றலர்ந்த தாமரை மலரை வைத்து வணங்க வேண்டும் என்ற ஆவலில் இவர் மாமல்லை கடற்கரையில் மலரை வைத்துவிட்டு, பாற்கடலுக்கு வழி ஏற்பாடு செய்ய முயற்சித்தார். அதற்காக கடல்நீரை தொடர்ந்து இரைத்துக் கொண்டிருந்தார். இவரின் தளரா முயற்சியையும் தாளாத பக்தியையும் கண்ட திருமால் ஒரு முதியவராக உருக்கொண்டு முனிவரிடம் வந்து, எனக்கு பசியும் களைப்புமாக உள்ளது. ஊருக்குள் சென்று உணவு வாங்கி வாருங்கள். அதுவரை நானே கடல்நீரை உமக்காக இரைக்கிறேன் என்று அனுப்பினார். முனிவரும் உணவு வாங்கிவந்து பார்த்தபோது கடல் உள்வாங்கி இருந்தது. முதியவரைக் காணோம். அப்போது ஒரு குரல் கேட்டது. முனிவர் அவ்விடத்தைப் பார்க்க, தான் வைத்த மலரை பாதங்களில் வைத்துக்கொண்டு திருமால் தரையில் பள்ளிகொண்டு ரிஷிக்கு காட்சி தந்தார். ஸ்ரீமன் நாராயணனே தன் திருக்கரத்தால் நீர் இரைத்த இந்த அர்த்தசேது கடலில் மகத்தன்று நீராடுவது பெரும் புண்ணியம்.