லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நோட்டு, புத்தகங்கள் வைத்து பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மார் 2025 01:03
மக்கள் பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கும் நிலையில், மன அழுத்தத்தில் இருந்து மக்களை விடுபட வைக்கும் ஒரு கோவிலும் இங்கு அமைந்துள்ளது. காந்திநகரில் உள்ளது ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் கோவில். கடந்த 1938ம் ஆண்டு பரகல மடத்தை சேர்ந்த ஸ்ரீ அபிநவ ரங்கநாதர் என்ற மடாதிபதி, இந்த கோவிலை நிறுவினார். ஹயக்ரீவர், விஷ்ணுவின் அவதாரம்; அவர் மனித உடலும், குதிரை தலையும் கொண்ட அறிவு, ஞானத்தின் கடவுளாக வணங்கப்படுகிறார். இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்தால் கல்வி, செல்வம், வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. ஹயக்ரீவரை தரிசனம் செய்தால் மன அழுத்தத்தில் இருந்தும் விடுபடலாம் என்றும் பக்தர்கள் கூறுகின்றனர். கோவிலில் உள்ள விக்ரஹம், நான்கு தாமரை கைகளை கொண்டுள்ளது. ஒன்று அறிவையும், மற்றொன்று ஞானத்தையும் போதிக்கும். மற்ற இரண்டு கைகளில் சங்கும், சக்கரமும் உள்ளன. தங்கள் பிள்ளைகள் பரீட்சைக்கு செல்லும் முன், பெற்றோர் இங்கு வந்து பேனா, நோட்டு, புத்தகங்கள் வைத்து பூஜை செய்து செல்கின்றனர். கடவுளுக்கு பூஜை செய்ய பயன்படுத்தப்படும் தேனை பக்தர்களுக்கு அர்ச்சகர்கள் வழங்குகின்றனர். சரஸ்வதி மற்றும் ஹயக்ரீவரின் மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் 48 நாட்கள் வெறும் வயிற்றில் தேனை சாப்பிட்டால், மாணவர்களுக்கு அறிவுத்திறன் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தேர்வுக்கு செல்லும் மாணவர்களும் இங்கு வந்து தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் இக்கோவிலில் மாணவர்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும். தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையும்; மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.