பதிவு செய்த நாள்
12
மார்
2025
01:03
கர்நாடகாவின் கடலோர மாவட்டமான தட்சிண கன்னடாவில் ஏராளமான பழங்கால, புராண வரலாறுகள் கொண்ட கோவில்கள் உள்ளன. கேரளாவின் மிக அருகில் தட்சிண கன்னடா அமைந்து இருப்பதால், கோவில்கள், கேரள பாணியில் இருக்கும். இந்நிலையில் தட்சிண கன்னடாவின் மங்களூரு நகரில் அமைந்து உள்ள முக்கிய கோவிலை பற்றி பார்க்கலாம். மங்களூரு டவுன் ஹம்பன்கட்டா என்ற இடத்தில் உள்ளது ஷரவு மஹா கணபதி கோவில். இந்த கோவில் தென் மாநிலங்களில் மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்றாக அறியப்படுகிறது. கோவிலின் கருவறையில் கணபதி வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சிவன் சிலை அமைந்து உள்ளது. இதுதவிர மற்ற தெய்வங்களின் சிலைகளும் உள்ளன. இந்த கோவிலின் வரலாறு பிரமிப்பாக உள்ளது.
துளு ராஜ்யம்; அதாவது கடந்த 800 ஆண்டுகளுக்கு முன்பு வீரபாகு என்ற மன்னர், துளு ராஜ்யத்தை ஆண்டு வந்தார். மக்கள் நலனில் மிகவும் அக்கறை கொண்ட அவர் மத பணிகளிலும் ஈடுபட்டார். மன்னர்களுக்கே உரித்தான வேட்டையாடும் குணமும் அவருக்கு இருந்தது. ஒரு முறை வேட்டையாட சென்ற போது காட்டில் பசுமாட்டிற்கு அருகில் புலி நின்றது. பசுமாட்டை, புலி வேட்டையாடி விடும் என்று நினைத்த வீரபாகு, பசுமாட்டை காப்பாற்ற புலி மீது வில் அம்பை எய்தினார். ஆனால் குறி தவறி அம்பு பசுமாடு மீது பாய்ந்து, மாடு இறந்தது. மனம் நொந்த மன்னர், முனிவர் ரிஷி பரத்வாஜிடம் சென்று கூறினார். ‘நீங்கள் செய்தது பாவம் தான். ஆனால் வேண்டும் என்று செய்யவில்லை. பாவத்தை தீர்க்க வழி உள்ளது. நீங்கள் பசுமாட்டை கொன்ற இடத்தில் சிவலிங்கத்தை நிறுவுங்கள்’ என்று மன்னரிடம், முனிவர் கூறினார். மேலும் சிவலிங்கத்தை நிறுவும் முன்பு குளம் ஒன்றை கட்டுங்கள். எனது தவத்தின் பயனாக அந்த குளத்தில் தண்ணீர் வரும் என்று கூறினார்.
ரத உற்சவம்; இதன்படி, மன்னரும் சிவலிங்கத்தை வைத்து வழிபட்டார். முனிவரின் தவத்தால் குளத்தில் தண்ணீரும் வந்தது. பின் அங்கு விநாயகர் கோவிலும் கட்டப்பட்டது. நாளடைவில் இந்த கோவில் பிரபலம் அடைய துவங்கியது. மாநிலத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவு வருகை தந்தனர். குறிப்பாக இந்த கோவில் தற்போது ஒரு சுற்றுலா தலமாகவும் உள்ளது. விநாயகர் சதுர்த்தி, யுகாதி, ரத உற்சவம், தீப உற்சவம் ஆகிய பண்டிகைகள் இந்த கோவிலில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகின்றன. வரும் 14ம் தேதி மீன சங்கரமணா என்ற திருவிழா கொண்டாடப்பட உள்ளது. கோவில் நிர்வாகம் சார்பில் நிறைய சமூக சேவைகள் செய்யப்படுகின்றன. குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்கு அதிகம் உதவுகின்றனர். யக் ஷ கானா நாடக கலையை வளர்ப்பதிலும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கோவிலின் நடை தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 12:45 மணி வரையும்; மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையும் திறந்திருக்கும். மேலும், விபரங்களுக்கு 0824 - 2440328 என்ற லேண்ட்லைன் நம்பருக்கு தொடர்பு கொள்ளலாம். கோவிலின் இணைய முகவரி sharavu@hotmail.com – நமது நிருபர் –